Tag: வாழைப்பூ வடை செய்வது எப்படி

  • சுவையான முருங்கை கீரை வடை செய்வது எப்படி?

    வடை இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி. வடைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் மெது வடை, மசால் வடை, சாம்பார் வடை, தயிர் வடை, ரச வடை, கீரை வடை போன்றவை மிகவும் பிரபலம். பொதுவாக பலர் மேற்கண்ட வடைகளை தவறாமல் உண்டு மகிழ்வர்.

    நாம் பயன்படுத்தும் முருங்கை கீரையில் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது என்பது முருங்கை வடையின் சிறப்பு. மேலும் மற்ற வடைகளைப் போல் எந்த சிரமமும் இல்லாமல் மிக எளிதாக செய்து விடலாம். அதுமட்டுமல்லாமல், அவை நமது வழக்கமான மாலை நேர சிற்றுண்டிகளுக்கு சிறந்த சத்தான மாற்றாகும்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் கடலை பருப்பு

    1 கைப்பிடி அளவு முருங்கை கீரை

    1 பெரிய வெங்காயம்

    4 காய்ந்த மிளகாய்

    ½ துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சோம்பு

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை

    முதலில் கடலை பருப்பை எடுத்து அதை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 2 மணி நேரம் வரை ஊற விடவும்.

    பின்பு வெங்காயம், முருங்கைக்கீரை, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

    2 மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் கடலை பருப்பை எடுத்து அதை மீண்டும் ஒரு முறை நன்கு சுத்தம் செய்து அதில் இருக்கும் தண்ணீரை முற்றிலுமாக வடித்து விடவும்.

    அடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, காய்ந்த மிளகாய், சோம்பு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை கொர கொரப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும். (தேவைப்பட்டால் அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.)

    பின்னர் அதை எடுத்து ஒரு bowl ல் கொட்டி அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் முருங்கைக்கீரையை சேர்த்து அதை நன்கு கலந்து பிணைந்து கொள்ளவும்.

    இப்பொழுது உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.

    பிறகு இந்த மாவில் இருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி அதை கையில் வைத்து ஒரு தட்டு தட்டி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த வடையை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் தட்டி வைத்திருக்கும் வடைகளை ஒவ்வொன்றாக போடவும்.

    அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு அது பொன்னிறம் ஆகும் வரை அதை வேக விடவும்.

    வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான முருங்கைக்கீரை வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ஆரோக்கியமான வாழைப்பூ வடை செய்வது எப்படி?

    எப்போதும் உளுந்த வடை, மசால் வடை என சாப்பிட்டு பழகியோருக்கு உடலுக்கு நன்மையை தரக்கூடிய வாழைப்பூவில் வடை செய்து கொடுத்தால் சற்று மாறுதலுடன் சுவையான வடையும் கிடைக்கும். இன்று வாழைப்பூவில் வடை செய்வது குறித்து காணலாம்.

    தேவையான பொருட்கள்:

    வாழைப்பூ – 1,

    கடலைப்பருப்பு – 1 கப்,

    காய்ந்த மிளகாய் – 2,

    பச்சை மிளகாய் – 5,

    பெருஞ்சீரகம் – சிறிதளவு,

    வெங்காயம் – 2,

    கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,

    இஞ்சி, பூண்டு, உப்பு – தேவையான அளவு.

    செய்முறை:

    முதலில் வாழை பூவை எடுத்து சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் வைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கப் கடலைப்பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சேர்த்து தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

    மிக்ஸியில் இஞ்சி – பூண்டு சிறிதளவு, பச்சை மிளகாய் 5, பெருஞ்சீரகம் அரை ஸ்பூன், அதனுடன் நாம் ஊற வைத்த கடலைப்பருப்பு அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    இதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு வெங்காயம், கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறதளவு, பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்பொழுது சூடான சுவையான மொறு மொறு வாழைப்பூ வடை தயார். வாழைப்பூவை உண்பதால் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும்., உடல் சூட்டை தணிக்கும்., கை-கால் எரிச்சலையும் குணமாக்கும்.