Tag: சிக்கன் குழம்பு செய்வது எப்படி

  • நாவில் கரையும் சுவையில் செட்டிநாடு மிளகு சிக்கன் ரோஸ்ட் – வீட்டிலேயே செய்வது எப்படி?

    ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம் வீட்டில் சிக்கன் இல்லாமல் இருக்காது. வழக்கமாகச் செய்யும் சிக்கன் குழம்பு அல்லது ப்ரை சாப்பிட்டுச் சலித்துவிட்டதா? அப்படியானால், வாசனையான மிளகு மற்றும் மசாலாக்கள் சேர்த்து செய்யப்படும் இந்த செட்டிநாடு மிளகு சிக்கன் ரோஸ்ட் ஒரு அருமையான மாற்றாக இருக்கும்.

    மிளகின் காரமும், சின்ன வெங்காயத்தின் சுவையும் சேர்ந்து இந்த ரோஸ்ட்டை மிகவும் அருமையாக மாற்றும். சப்பாத்தி, பரோட்டா, சூடான சாதம் அல்லது ரச சாதத்துடன் சேர்த்துச் சாப்பிடுவதற்கு இது மிகச் சிறந்த காம்பினேஷனாகும். வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், மிகச் சுலபமான முறையில் இதை எப்படிச் செய்வது என்று கீழே விரிவாகப் பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்

    • சிக்கன் – 500 கிராம் (நன்றாகச் சுத்தம் செய்தது)
    • சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது)
    • இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
    • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
    • கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடி (தாராளமாகச் சேர்க்கவும்)
    • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
    • மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
    • மல்லித்தூள் (தனியா தூள்) – 2 தேக்கரண்டி
    • கரம் மசாலா – அரை தேக்கரண்டி
    • நல்லெண்ணெய் – 3 மேசைக் கரண்டி
    • உப்பு – தேவையான அளவு
    • கொத்தமல்லி தழை – சிறிதளவு

    வறுத்து அரைக்க வேண்டியவை:

    • மிளகு – 2 மேசைக் கரண்டி
    • சீரகம் – 1 தேக்கரண்டி
    • சோம்பு (பெரிய சீரகம்) – 1 தேக்கரண்டி
    • பட்டை – 1 சிறிய துண்டு
    • கிராம்பு – 3

    செய்முறை விளக்கம்

    1. மிளகு மசாலா தயாரித்தல்: அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து, வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள மிளகு, சீரகம், சோம்பு, பட்டை மற்றும் கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்து குறைந்த தீயில் வாசனை வரும் வரை வறுத்து, ஆறிய பிறகு மிக்ஸியில் கொரகொரகப்பாகப் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
    2. சிக்கனை வேகவைத்தல்: அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
    3. தக்காளி மற்றும் மசாலா சேர்ப்பு: இதன்பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து மசிய வதக்கிய பின், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துச் சிறிய தீயில் வதக்கவும்.
    4. சிக்கன் ரோஸ்ட் பதம்: இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்து மசாலாவுடன் நன்கு பிரட்டவும். சிக்கனில் இருந்து தண்ணீர் பிரிந்து வெந்து வரும். சிக்கன் பாதியளவு வெந்ததும், நாம் பொடித்து வைத்துள்ள மிளகு மசாலாப் பொடியை இதனுடன் சேர்க்கவும்.
    5. இறுதிக் கட்டம்: தண்ணீர் முற்றிலும் வற்றி, மசாலா சிக்கனுடன் கெட்டியாக ஒட்டிக்கொண்டு ரோஸ்ட் பதம் வரும் வரை மிதமான தீயில் கிளறவும். இறுதியாகக் கரம் மசாலா மற்றும் கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்கினால், மணக்க மணக்கச் செட்டிநாடு மிளகு சிக்கன் ரோஸ்ட் தயார்!

    கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி!

  • பெப்பர் சிக்கன் செய்வது எப்படி?

    பொதுவாக அசைவ பிரியர்கள் மத்தியில் சிக்கன் மிகவும் பிரபலமானது. பிரபலமான சிக்கன் உணவுகளில் சிக்கன் 65, பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், கிரில் சிக்கன், பெப்பர் சிக்கன் போன்றவை அடங்கும்.

    இவற்றில் காரத்தை விரும்புவோருக்கு பெப்பர் சிக்கன் சிறந்த தேர்வாகும். இந்த உணவு மிகவும் எளிமையானது மற்றும் பாரம்பரிய செட்டிநாடு சமையல் முறையைப் பின்பற்றுகிறது. ஏனெனில் மிளகு தவிர வேறு எந்த மசாலாவும் சேர்க்கப்படுவதில்லை.

    மிளகாயை சிக்கனில் சேர்ப்பதால் மற்ற சிக்கன் உணவுகளை விட இவை அதிக சத்தானவை. ஜலதோஷம், வாயு பிரச்சனை மற்றும் செரிமானத்திற்கு மிளகு மிகவும் நல்லது.

    இப்போது பெப்பர் சிக்கன் தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    500 கிராம் சிக்கன்

    2 பெரிய வெங்காயம்

    1 1/2 மேசைக்கரண்டி மிளகு

    1 மேசைக்கரண்டி சோம்பு

    1 மேசைக்கரண்டி சீரகம்

    1 துண்டு பட்டை

    2 கிராம்பு

    2 காய்ந்த மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    4 பல் பூண்டு

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    கொத்தமல்லி சிறிதளவு

    செய்முறை

    முதலில் மிளகு, சோம்பு, மற்றும் சீரகத்தை ஒன்றாக ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி மற்றும் பூண்டை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கிராம்பு, பட்டை, காய்ந்த மிளகாய், மற்றும் சிறிதாக நறுக்கி வைத்துள்ள இஞ்சி பூண்டை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக பொன் நிறம் வரும் அளவிற்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமானதும் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, பச்சை மிளகாய், மற்றும் அரைத்து வைத்துள்ள மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    பின்னர் சிக்கன் துண்டுகளை அதில் போட்டு பெப்பர் நன்றாக சிக்கன் துண்டுகளில் ஓட்டும் அளவிற்கு புரட்டிப் போடவும்.

    பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு சிக்கனை வேக விடவும்.

    சிக்கன் வெந்ததும் அதில் சிறிது அளவு கருவேப்பிலையை போட்டு ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து சிறிது கொத்தமல்லியை மேலே தூவவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பெப்பர் சிக்கன் தயார்.

    இதை வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்வது எப்படி?

    சிக்கன் கிரேவி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். இன்னும் கொஞ்சம் காரம் தூக்கலாக செய்தால் எப்படி இருக்கும்?. அதைத்தான் இன்று பார்க்க வந்திருக்கிறோம். நமது உள்ளூர் சிக்கன் கிரேவிக்கும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவிக்கும் உள்ள பெரிய வித்தியாசம் காரமானது.

    ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி நமது உள்ளூர் சிக்கன் கிரேவியை விட இரண்டு மடங்கு காரமாக இருக்கும். ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி நம் உள்ளூர் சிக்கன் கிரேவியை சாப்பிட்டு அலுப்பவர்களுக்கு நல்ல மாற்று. அதிக காரமாக விரும்பாதவர்கள் அதில் நாம் சேர்க்கும் மிளகாய்த்தூள் மற்றும் பச்சை மிளகாயின் அளவைக் குறைத்துக்கொள்ளலாம்.

    மசாலாப் பிரியர்கள் இதை அப்படியே செய்து, சாதத்தில் அல்லது சப்பாத்தி, நாண், பராத்தா போன்றவற்றில் சைட் டிஷ்ஷாக சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுதே உங்கள் நாவில் எச்சில் ஊர ஆரம்பித்து விட்டதா?

    தேவையான பொருட்கள்

    500 கிராம் சிக்கன்

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    3 பச்சை மிளகாய்

    10 to 15 தேங்காய் துண்டுகள்

    3 பூண்டு பல்

    1 இஞ்சி துண்டு

    2 மேஜைக்கரண்டி தனியா

    1 மேஜைக்கரண்டி கசகசா

    ½ மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி சோம்பு

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 பட்டை துண்டு

    2 ஏலக்காய்

    3 கிராம்பு

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் வெங்காயம், தக்காளி, மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, தேங்காயை சிறு சிறு துண்டுகளாக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு பிரட்டி ஒரு மூடி போட்டு அப்படியே வைத்து சுமார் 30 நிமிடம் வரை ஊற விடவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், சோம்பு, 2 மேஜைக்கரண்டி கசகசா, பட்டை, ஏலக்காய், மற்றும் கிராம்பை சேர்த்து அதை சுமார் 2 நிமிடம் வரை வறுக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்டு பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் நாம் நறுக்கி வைத்திருக்கும் தேங்காய் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் ஒரு மேஜைக்கரண்டி அளவு கசகசாவை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலையை போட்டு வெங்காயம் நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் நிறம் மாறியதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை அதில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 8 லிருந்து 10 நிமிடம் வரை வதக்கவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து எடுத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வதக்கவும்.
    (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பை சேர்த்து கொள்ளவும்.)

    5 நிமிடத்திற்கு பிறகு இதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அடுப்பை குறைத்து மூடி போட்டு சுமார் 10 நிமிடம் வரை வேக விடவும்.

    10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து ஒரு கிளறு கிளறி அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின்பு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு மூடி போட்டு அதை மீண்டும் ஒரு10 நிமிடம் வேக விடவும்.(150 ml லிருந்து 200 ml வரை தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.)

    10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சாதத்தில் ஊற்றி சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான, சுவையான, மற்றும் காரமான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • விரும்பி சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு சில்லி சிக்கன் செய்வது எப்படி?

    சில்லி சிக்கன் என்பது இந்தோ-சீன உணவாகும், இது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமானது. இவைகளை ஃப்ரைடு ரைஸ் மற்றும் பிரியாணியுடன் அடிக்கடி சாப்பிடுவார்கள். இது ஒரு கூட்டத்தை எளிமையாக ரசித்து சாப்பிட வைக்கிறது.

    உண்மையில், பல துரித உணவு உணவகங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சில்லி சிக்கன் என்று சொன்னால் அது மிகையாகாது. சில்லி சிக்கன் பிரியர்கள் பொதுவாக துரித உணவு உணவகங்களில் ஆர்டர் செய்வார்கள்.

    ஆனால் இதை நாம் வீட்டிலேயே சுகாதாரமான முறையில் எளிதாக செய்யலாம். சில்லி சிக்கன் பெரும்பாலான குழந்தைகளின் விருப்பமான உணவாகும். எனவே இதை வீட்டிலேயே சுகாதாரமாக செய்து குழந்தைகளுக்கு பயமின்றி கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    500 கிராம் போன்லெஸ் சிக்கன்

    1 முட்டை

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    6 பூண்டு பல்

    2 துண்டு இஞ்சி

    4 மேஜைக்கரண்டி சோள மாவு

    4 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    ¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு வெங்காய தாள்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து அதை கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை ஒரு bowl ல் போட்டு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.

    கோழி கறியே தண்ணீர் விடும் என்பதால் அதில் நாம் தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

    பின்பு ஒரு bowl ல் முட்டையை உடைத்து ஊற்றி அதில் 3 மேஜைக்கரண்டி அளவு சோள மாவு, ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மைதா மாவை போட்டு தேவையான அளவு தண்ணீரை தெளித்து அதை நன்கு அடித்து மாவை கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கோழி கறியை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை எடுத்து நாம் செய்து வைத்திருக்கும் மாவில் நன்கு முக்கி எண்ணெய்யில் போடவும்.

    பின்பு அது ஒரு புறம் வெந்ததும் அதை ஒரு கரண்டியின் மூலம் மறு புறம் திருப்பி விட்டு அது பொன் நிறம் ஆனதும் கரண்டியில் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமிருக்கும் சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஒரு சிட்டிகை அளவு உப்பை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் பெப்பர் தூளைப் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், மற்றும் சில்லி சாஸை ஊற்றி அதை நன்கு கிளறி விடவும்.

    பின்னர் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதில் சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை அதை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் பொரித்தெடுத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து அது நன்கு மசாலாவுடன் சேருமாறு அதை கிண்டி விட்டு சிறிது நேரம் வேக விடவும்.

    பின்பு அதை இறக்குவதற்கு முன் அதில் சிறிதளவு வெங்காய தாள் மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சில்லி சிக்கன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மணக்கும் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

    பருப்பு குழம்பு தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவாகும். தமிழக மக்களின் அன்றாட உணவில் பருப்பு குழம்புக்கு முக்கிய இடம் உண்டு.

    இவற்றில் நமது உடலுக்கு மிகவும் தேவையான புரதச்சத்து அதிகம் உள்ள பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பு போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது.

    துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பு குழம்பு செய்வதும் மிகவும் எளிது. எந்தவொரு கடினமான நடைமுறையையும் பின்பற்றாமல் மிக எளிதாக இதைச் செய்யலாம்.

    சமைக்காதவர்கள் கூட முதல் முறை மிக எளிதாக செய்யலாம். மேலும் இந்த பருப்பு குழம்பை வாரம் ஒருமுறை தவறாமல் செய்து வந்தால், அது நம் உடலுக்கு மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்:

    150 கிராம் பாசி பருப்பு

    100 கிராம் துவரம் பருப்பு

    2 பெரிய வெங்காயம்

    3 தக்காளி

    8 பல் பூண்டு

    2 பச்சை மிளகாய்

    2 காய்ந்த மிளகாய்

    1 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    ½ மேஜைக்கரண்டி கடுகு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

    1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை:

    முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி, துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற வைக்கவும்.

    15 நிமிடத்திற்கு பிறகு ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒன்னே முக்கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் நாம் ஊற வைத்திருக்கும் துவரம் பருப்பு மற்றும் பாசிப் பருப்பை நன்கு கழுவி போடவும். (தண்ணீர் சரியான அளவு ஊற்ற வேண்டும் அதிகமாக ஊற்றி விடக்கூடாது.)

    அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து மூடி போட்டு அதை சுமார் 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு விசில் முழுமையாக போனதும் குக்கர் மூடியை திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து பருப்பை நன்கு மசித்து விடவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். (நெய்யை விரும்புவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யையும் சேர்த்து கொள்ளலாம்.)

    எண்ணெய் சுட்ட பின் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் சீரகம், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள், மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை அப்படியே நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பில் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கலந்து விட்டு பருப்பு குழம்பை சுட சுட சாதத்தில் ஊற்றி பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பருப்பு குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • கிராமத்து நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி!

    பொதுவாக, சிக்கன் குழம்பு எப்படிச் செய்தாலும், கோழியின் சுவை குழம்பை இன்னும் சுவையாக்கும் அல்லவா?

    இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சிக்கன் கிரேவியை எப்படி சரியாக தயாரிப்பது என்று பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    கோழிக்கறி – 1/2 கிலோ

    வெங்காயம் – 4

    பச்சை மிளகாய் – 4

    தக்காளி – 4

    சிவப்பு மிளகாய் – 8

    தனியா – ஒரு கைப்பிடி

    மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

    மிளகு – 1 தேக்கரண்டி

    சீரகம் – 1 தேக்கரண்டி

    சோம்பு – 1/2 தேக்கரண்டி

    இஞ்சி – 1 துண்டு

    பூண்டு – 1(முழு)

    கசகசா – 1 தேக்கரண்டி

    தேங்காய் – 1/2 மூடி

    கிராம்பு, பட்டை, ஏலக்காய் – சிறிதளவு

    எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

    கறிவேப்பிலை – 1 கொத்து

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    கோழியை நன்றாக கழுவவும். வர மிளகாய், தனியா, மிளகு, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை எண்ணெயில்லாமல் வறுத்து, நைசாக அரைக்கவும்.

    இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வேண்டுமானால் சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். பச்சை மிளகாயை இரண்டாக நறுக்கவும். தக்காளியை நறுக்கவும்.

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஏலக்காயை தோல் நீக்கி, பட்டை, கிராம்பு சேர்த்து வதக்கவும். சிவந்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

    வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, கோழிக்கறி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    கறி நன்றாக வெந்ததும், அரைத்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, கறியின் மேல் மட்ட அளவு தண்ணீர் ஊற்றவும். குழம்பு கொதித்து கெட்டியானதும் இறக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்க்கவும். சுவையான கிராமத்து சிக்கன் குழம்பு தயார்.

    குறிப்பு: தேங்காய்க்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து சிக்கன் கிரேவி செய்யலாம். இது மிகவும் சுவையாக இருக்கும்.