Tag: காளான் கிரேவி செய்வது எப்படி

  • செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி?

    சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    காளான் – 450 கிராம்

    பச்சை பட்டாணி – 3/4 கப்

    வெங்காயம் – 1 (நறுக்கியது)

    தக்காளி – 2 (நறுக்கியது)

    இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

    பச்சை மிளகாய் – 2

    மிளகாய் தூள் – 1 1 /4 டீஸ்பூன்

    மல்லித் தூள் – 1 டீஸ்பூன்

    கரம் மசாலா – 1 /4 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் – 1 /4 டீஸ்பூன்

    கெட்டியான தேங்காய் பால் – 1 /4 கப்

    கொத்தமல்லி – சிறிது

    சீரகம் – 1 /2 டீஸ்பூன்

    உப்பு – சுவைக்கேற்ப

    எண்ணெய் – 1 1 /2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    முதலில் காளானை சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் பச்சை பட்டாணியை நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.

    அதே வாணலியில் மீண்டும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, பின் தக்காளியைப் போட்டு, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    வதக்கிக் வைத்திருக்கும் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    அடுத்து அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, சிறிது நீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.

    இறுதியாக தேங்காய் பால் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லி மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், செட்டிநாடு பச்சை பட்டாணி காளான் மசாலா தயார்.

  • கொண்டைக்கடலை கிரேவி செய்வது எப்படி?

    இந்தியாவில் தினசரி பிரதான உணவாக குழம்பு சாதம் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியாவில் எல்லோர் வீட்டிலும் சாதத்தில் குழம்புடன் தயாரித்து சாப்பிடுவது வழக்கம். குழம்புகளில் பல வகைகள் உள்ளன. சாம்பார், பருப்பு குழம்பு, கறிவேப்பிலை, புளி குழம்பு, தக்காளி குழம்பு, வத்த குழம்பு, கத்தரிக்காய் குழம்பு போன்றவை.

    அப்படியானால் இன்று இங்கு இருப்பது வித்தியாசமான கொண்டைக்கடலை குழம்பு.

    கொண்டைக்கடலை கிரேவியின் விசேஷம் என்னவென்றால், அதற்கு கடலைப்பருப்பு, வெங்காயம் மற்றும் தக்காளி மட்டுமே தேவைப்படுவதால், வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிதாக செய்யலாம்.

    கொண்டைக்கடலை உடலுக்கு மிகவும் தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளதால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல், அவை நமது வழக்கமான கிரேவிகளுக்கு சிறந்த மாற்றாகும்.

    தேவையான பொருட்கள்

    200 கிராம் கொண்டைக்கடலை

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    2 பச்சை மிளகாய்

    3 பல் பூண்டு

    1 துண்டு இஞ்சி

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    1 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    1 மேஜைக்கரண்டி அம்ச்சூர் தூள்

    ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு மிளகாய் தூள்

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் கொண்டைக்கடலை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 6 மணி நேரம் வரை ஊற வைத்து பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கொண்டைக்கடலையை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் கொண்டைக்கடலை, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், மற்றும் சிறிதளவு உப்பு போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 3 லிருந்து 4 விசில் வரும் வரை வேக விடவும்.

    4 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையில் இருந்து ஒரு கையளவு கொண்டைக்கடலையை எடுத்து போட்டு அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
    எண்ணெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா, அம்ச்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வேக விடவும்.

    தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (சுமார் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

    பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை போட்டு நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும்.

    குழம்பு நன்கு கொதித்ததும் அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் கொண்டைக்கடலையை பக்குவமாக சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்குப் பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு கொண்டைக்கடலை குழம்பை எடுத்து சாதத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அருமையான கொண்டைக்கடலை குழம்பு தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • சுவையான பெப்பர் மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி?

    காளான் பொதுவாக பல வழிகளில் சமைத்து உண்ணப்படுகிறது. அதில் பெப்பர் மஷ்ரூம் கிரேவியும் ஒன்று. இவை சப்பாத்தி, பிரைடு ரைஸ், ரசம் சாதம் மற்றும் வெள்ளை சாதம் ஆகியவற்றுடன் பரிமாறுவது சிறந்தது. இதனுடன் சேர்க்கப்படும் காளானை தூள் துண்டுகளாக வெட்டி மாலை நேர சாண்ட்விச் ஸ்டஃபிங்காக பயன்படுத்தலாம்.

    காலையில் டிபனுக்கு சைட் டிஷ் ஆகவோ, மாலையில் சாண்ட்விச் ஆகவோ அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவோ செய்வது எளிது. காளான்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக வைட்டமின் டி, இது பெரும்பாலும் இறைச்சியில் மட்டுமே காணப்படுகிறது.

    காளான் மற்றும் மிளகு சேர்த்து செய்வதால் உடலுக்கும் மிகவும் சத்தானது. காளான்கள் சமைப்பதற்கு அதிக நேரம் எடுக்காததால் இவற்றைச் செய்வதும் மிகவும் எளிதானது. இப்போது மிளகு காளான் கிரேவிக்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்ப்போம்.

    தேவையான பொருட்கள்:

    2 பாக்கெட் பட்டன் மஷ்ரூம்

    2 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    1 துண்டு இஞ்சி

    3 பூண்டு பல்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    1 மேசைக்கரண்டி தனியாதூள்

    1 மேசைக்கரண்டி மிளகு

    1 மேசைக்கரண்டி சோம்பு

    1 மேசைக்கரண்டி மஞ்சள் தூள்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    கருவேப்பிலை சிறிதளவு

    செய்முறை:

    முதலில் மஷ்ரூம் ஐ ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் சிறிது அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். (இவ்வாறு செய்தால் மஷ்ரூம் வெள்ளை நிறமாக மற்றும் சமைக்கும் வரை நிறம் மாறாமல் இருக்கும்.)

    அடுத்து மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, மற்றும் இஞ்சி பூண்டு ஐ ஒரு மிக்சியில் போட்டு பேஸ்ட் ஆக தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை மேசைக்கரண்டி சோம்பு மற்றும் ஒரு மேசைக்கரண்டி மிளகு சேர்த்து சோம்பு சிறிது நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும்.

    பின்பு அதை சிறுது நேரம் ஆற விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தூள் செய்து வைத்துக்கொள்ளவும்.

    பின்னர் ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 அல்லது 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை காய விடவும்.

    எண்ணெய் காய்ந்ததும் அரை மேஜைக்கரண்டி அளவு சோம்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை மற்றும் ஒரு பின்ச் அளவு உப்பையும் அதில் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் அளவிற்கு வதக்கவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
    அடுத்து அதில் தேவையான அளவு மிளகாய்த்தூள், தனியாத்தூள், நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பட்டன் மஷ்ரூம் ஐ சேர்த்து நன்கு பிரட்டி பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பையும் சேர்த்து வேக விடவும்.

    மஷ்ரூம் ஐ கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். (தேவைப்பட்டால் மட்டுமே சிறுது அளவு தண்ணீர் தெளிக்கவும் ஏனென்றால் மஷ்ரூம் தண்ணீர் விடும் தன்மை கொண்டது.)

    மஷ்ரூம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சோம்பு மற்றும் மிளகு துளை இதனுடன் சேர்த்து நன்கு பிரட்டவும். பின்பு இறக்குவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்பு சிறிதளவு கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான சுவையான மற்றும் சத்தான பெப்பர் மஷ்ரூம் கிரேவி தயார்.

    இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    ருசியான செட்டிநாடு காளான் பிரியாணி செய்வது எப்படி?

    காளான் பயன்படுத்தி பல வகையான சமையல் செய்யலாம். அந்த வகையில் சைவ பிரியர்களுக்கு காளான் பிரியாணி மிகவும் பிடித்த உணவாகும். அதுவும் செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்தால் ருசியே தனிதான். செட்டிநாடு முறைப்படி காளான் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    காளான் : 1/2 கிலோ

    பாசுமதி அரிசி : 2 கப்

    வெங்காயம் : 1 நறுக்கியது

    தக்காளி : 2 நறுக்கியது

    இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்

    கொத்தமல்லி : 1/4 கப் (துருவியது)

    புதினா : 1/4 கப் (துருவியது)

    பச்சை மிளகாய் : 3 நறுக்கியது

    எண்ணெய் : 3 டேபிள் ஸ்பூன்

    நெய் : 3 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் பால் : 1/2 கப்

    தயிர் : சிறிது

    மிளகாய் தூள் : 2 டீஸ்பூன்

    சோம்பு தூள் : 1/2 டீஸ்பூன்

    மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்

    தண்ணீர் : 3 கப்

    உப்பு : தேவையான அளவு

    தாளிக்க :

    பிரியாணி இலை

    ஏலக்காய்

    லவங்கம்

    கிராம்பு அனைத்தும் தேவைக்கேற்ப

    செய்முறை:

    முதலில் காளானை கழுவவும். பின்னர் அதை சிறிது சிறிதாக நறுக்க வேண்டும்.

    அதே நேரத்தில், அரிசியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை சேர்த்து வதக்கவும்.

    பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.

    பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியதும் காளானை சேர்த்து மஞ்சள் தூள், மல்லித்தூள், சோம்பு தூள், தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து நன்றாக குழம்பு வரும் வரை கொதிக்கவிடவும்.

    அதே சமயம் மற்றொரு அடுப்பில் குக்கரை வைத்து அதில் அரிசியைக் கழுவி, கிரேவியை ஊற்றி, 3 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 3 விசில் வரும் வரை வேக விடவும்.

    இப்போது சுவையான செட்டிநாடு காளான் பிரியாணி ரெடி. சைவ பிரியர்களுக்கு ஏற்ற காளான் பிரியாணி.

    இதையும் செய்துபார்க்கலாமே!: செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி!

  • சுவையான செட்டிநாடு காளான் குழம்பு செய்வது எப்படி?

    சைவ உணவு உண்பவர்களுக்கு காளான் மிகவும் பிடித்தமானது. அப்படிப்பட்ட காளான்களை பயன்படுத்தி செட்டிநாடு ஸ்டைல் காளான் குழம்பு செய்வது எப்படி என்று இன்று பார்க்கலாம்.

    அனைத்து வகையான காளான்களிலும் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

    காளான்களில் புரதங்கள், வைட்டமின் சி, பி மற்றும் டி, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன.

    அப்படிப்பட்ட காளான்களை வைத்து செட்டிநாடு ஸ்டைல் கிரேவி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    காளான் – 300 கிராம்

    வெங்காயம் – 2

    தக்காளி – 2

    மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்

    கொத்துமல்லி விதை(தனியா) – 1 ஸ்பூன்

    சீரகம் – 3/4 ஸ்பூன்

    சோம்பு – 1/2 ஸ்பூன்

    பட்டை- 2 இன்ச் துண்டு

    கிராம்பு – 2

    ஏலக்காய் – 2

    காய்ந்த மிளகாய் – 5 (அ) காரத்துக்கேற்ப

    தேங்காய் – கால் மூடி

    எண்ணெய்

    உப்பு

    கறிவேப்பிலை

    கொத்துமல்லி இலை

    செய்முறை:

    முதலில் ஒரு வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும்.

    கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி இறக்கவும்.

    எல்லாம் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

    இப்போது காளானை நன்கு கழுவி, உலர்த்தி துடைத்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    குழம்பு நன்றாக கொதி வந்ததும் காளான் துண்டுகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

    குழம்பு கெட்டியானதும் எண்ணெய் பிரிந்து வர ஆரம்பித்ததும் கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சூப்பர் காளான் குழம்பு தயார். இந்த கிரேவியை சாதம், தோசை, இட்லியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

    இந்த கிரேவியும் செய்து பாருங்களேன்!: கறிவேப்பிலை குழம்பு செய்வது எப்படி!