Author: Arumugam K

  • கோவில் புளியோதரை செய்வது எப்படி?

    புளியோதரை தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றும் பாரம்பரிய உணவாகும். புளியோதரைக்கு என்றே உணவுப் பிரியர்கள் கூட்டம் இருக்கிறது என்றால் மிகையாகாது. குறிப்பாக கோவில் புளியோதரைக்கு உள்ள சுவையே தனிச்சிறப்பு வாய்ந்தது.

    அதன் புகழ் காரணமாக, கோயிலுக்குச் சென்று இறைவனை தரிசிப்பது போல், அங்கு பரிமாறப்படும் புளியோதரை உண்பதற்காக கூட்டம் கூட்டமாகச் செல்வது வழக்கம். ஆதலால் இன்று நாம் இங்கு காணஇருப்பது மிகவும் பிரபலமான புளியோதரை அதாவது கோவில் புளியோதரை.

    பொதுவாக வீட்டில் செய்யும் புளியோதரையை விட கோவில் புளியோதரை சற்று வித்தியாசமானது. கோவில் புளியோதரையில் வெந்தயமும் மிளகும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களைத் தவிர்க்கிறார்கள். கோவில் புளியோதரையின் சுவையின் ரகசியம் இதுதான்.

    இவற்றைச் செய்வதற்கு சிறிது நேரம் தேவைப்பட்டாலும், செய்யும் போது சலிப்பு ஏற்படாத அளவுக்கு சுவையாக இருக்கும்.

    தேவையான பொருட்கள்

    1 கப் பச்சரிசி

    3 மேஜைக்கரண்டி வேர்க்கடலை

    பெரிய நெல்லிக்காய் சைஸ் புளி

    8 to 10 காஞ்ச மிளகாய்

    1 மேஜைக்கரண்டி மல்லி விதை

    மிளகு 1 மேஜைக்கரண்டி

    2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

    உளுத்தம் பருப்பு 2 மேஜைக்கரண்டி

    வெந்தயம் 2 மேஜைக்கரண்டி

    1½ மேஜைக்கரண்டி வெள்ளை எள்

    1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    கடுகு 1 மேஜைக்கரண்டி

    மஞ்சள் தூள் 1 மேஜைக்கரண்டி

    நெல்லிக்காய் சைஸ் வெல்லம் துண்டு

    தேவையான அளவு நல்லெண்ணெய்

    மிளகாய் தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    சிறிதளவு கருவேப்பிலை

    செய்முறை

    கோவில் புளியோதரை செய்வது எப்படி:

    முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புளியை போட்டு ஊற வைக்கவும்.

    பின்பு பச்சரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மல்லி விதை, மிளகு, மற்றும் 4 லிருந்து 6 காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து அதே கடாயில் 1 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் 1 மேஜைக்கரண்டி அளவு உளுத்தம் பருப்பை போட்டு அது சிவக்கும் வரை அதை வறுக்கவும்.

    அது சிவந்ததும் அதில் ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு வெந்தயத்தை போட்டு அதையும் சிவக்க வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். (வெந்தயத்தை அதிக நேரம் வறுத்து விட கூடாது அது சிவந்தவுடன் அதை சரியாக அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.)

    பின்பு அதே கடாயில் வெள்ளை எள்ளை போட்டு அது சிவக்கும் வரை அதை வறுத்து எடுத்து அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பிறகு கடைசியாக அந்த கடாயில் சிறிதளவு கருவேப்பிலை போட்டு அதை நன்கு மொறு பொறுப்பான பதத்திற்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது நாம் வறுத்த அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆற விடவும்.

    அவை ஆறியதும் அவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். (மிக்ஸி ஜாரில் போட்டு அரைப்பதற்கு பதிலாக அம்மிக்கல்லில் போட்டு பொடி செய்தால் இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும்.)

    அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் புளியை கரைத்து அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி புளி தண்ணீரை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு தாளித்து கடுகு வெடித்தவுடன் அதில் 1 மேஜைக்கரண்டி அளவு கடலை பருப்பு மற்றும் 1 மேஜைக்கரண்டி அளவு உளுத்தம் பருப்பை போட்டு அது சிவக்கும் வரை அதை தாளிக்கவும்.

    பருப்பு சிவந்தவுடன் அதில் 4 லிருந்து 6 காய்ந்த மிளகாயை கில்லி அதில் போட்டு தாளிக்கவும்.

    பின்பு அதில் அரை மேஜைக்கரண்டி அளவு வெந்தயம், மஞ்சள் தூள், பெருங்காய தூள், வேர்க்கடலை, மற்றும் கருவேப்பிலையை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் தேவையான அளவு கல்லுப்பு மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீரை ஊற்றி அதனுடன் வெல்லத்தையும் போட்டு அதை நன்கு கலந்து விட்டு வற்ற விடவும்.

    தண்ணீர் நன்கு வற்றியவுடன் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து சுமார் ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு இதில் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும்.

    இப்பொழுது நாம் செய்து வைத்திருக்கும் சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய்யை ஊற்றி அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.

    அடுத்து புளிக்காய்ச்சல் நன்கு வற்றியவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதிலிருந்து சாதத்திற்கு தேவையான அளவு புளி காய்ச்சலை எடுத்து ஊற்றி சாதத்தை நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் பொடியில் இருந்து தேவையான அளவு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான கோவில் புளியோதரை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • மண்சட்டி நண்டு ரசம் வைப்பது எப்படி?

    நாங்கள் வழக்கமாக ஒவ்வொரு வாரமும் மீன் குழம்பு மற்றும் கறி குழம்பு சாப்பிடுவோம், ஆனால் சில நேரங்களில் மீன், கறியை விட நண்டு மீது ஆசை இருக்கும்.

    ரசத்திற்கு வறுத்த நண்டும் சேர்த்தால் சுவை சூப்பராக இருக்கும். அதேநேரத்தில் அந்த ரசத்திற்கு பதிலாக நண்டை வைத்து ரசம் செய்தால் அதன் சுவை வேறு லெவலில் இருக்கும். அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!

    தேவையான பொருட்கள்

    கடல் நண்டு

    மிளகு தூள்

    மிளகாய் தூள்

    இஞ்சி பூண்டு பேஸ்ட்

    பிரிஞ்சி இலை

    தக்காளி

    வெங்காயம்

    உப்பு

    இந்த அனைத்து பொருட்களுமே உங்களுடைய தேவைக்கேற்ற சேர்த்துக்கொள்ளலாம்.

    செய்முறை

    முதலில் நண்டை கழுவி இடித்து தனியாக தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.

    இப்போது அடுப்பில் மண் சட்டியை வைத்து அதில் நண்டை போடவும்.

    அதில் வெங்காயம் தக்காளி, பச்சை மிளகாய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு இடித்து போட்டாலும் சரி பேஸ்ட் போட்டாலும் உங்கள் வசதிக்கு ஏற்றது போல் சேர்த்துக்கொள்ளவும்.

    பின்பு அதில் கருவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், இப்போது அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றவும்.

    பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மிதக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். அதனை மூடி வைத்து கொதிக்கவிடவும்.

    இது அனைத்தும் நன்கு வெந்தவுடன் ஒரு சூப் போல் இருக்கும் அதனை எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி பக்கத்தில் மிளகு தூள் வைத்துகொண்டு அதில் கலந்து குடித்தால் ஐயோ டேஸ்ட் வேற லெவல்.

    நண்டு ரசத்தில் மிளகு தூள் சேர்ப்பதால் நெஞ்சு சளிக்கு மிக நல்லது. மிளகு தூள் அதிகமாக சேர்த்தால் வயிறு எரிச்சல் ஏற்படும் ஆதலால் தேவைக்கு தகுந்தாற்போல் சேர்க்கவும்.

  • கேரள ஸ்டைலில் பொரித்த மாங்காய் ஊறுகாய்!!

    நீங்கள் இதுவரை எத்தனையோ விதமாக மாங்காய் ஊறுகாய் செய்திருப்பீர்கள். ஆனால் இந்தப் பதிவில் நான் சொல்லப்போகும் மாங்காய் ஊறுகாயை ஒருமுறை செய்துவிட்டால் சுவை வேறு லெவல்.

    அதே போல இதை வீட்டில் ஒரு முறை செய்தால் மாங்காய் ஊறுகாயை கடையில் வாங்கும் எண்ணம் வராது. சரி முற்றிலும் வித்தியாசமான முறையில் மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மாங்காய் – 10 முதல் 12 எண்கள்

    நல்லெண்ணெய் – 7 டீஸ்பூன்

    வெந்தயம் – 1 டீஸ்பூன்

    கடுகு – 1 டீஸ்பூன்

    உப்பு – 1 டீஸ்பூன் (தேவையான அளவு)

    சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் (உங்கள் காரத்திற்கு ஏற்ப)

    செய்முறை

    மாங்காயில் பால் வடிந்து அதில் அழுக்கு படிந்து இருக்கும். அதனால் இரண்டு முறை கழுவி தனியாக வைக்கவும்.

    பிறகு மாங்காயின் நுனியை நீக்கி நறுக்கி மீண்டும் ஒருமுறை கழுவவும்.

    கேரள முறைப்படி நாம் செய்ய இருப்பதால் மாங்காயை நீள துண்டுகளாக நறுக்கவும்.

    இப்போது ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானபின், அதில் நறுக்கிய அனைத்து மாங்காயையும் போட்டு மேலோட்டமாக வதக்கவும்.

    பின்னர் வதக்கிய மாங்காயை ஒரு பாத்திரத்தில் தனியாக வைக்கவும்.

    இப்போது வெந்தயத்தையும் கடுகையும் வறுத்து தனியாக வைக்கவும்.

    பின் இந்த வெந்தயத்தையும் கடுகையும் நன்கு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

    பிறகு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின் உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம் மற்றும் வறுத்து அரைத்த பொடியை அதில் பாதியாக வதங்கிய மாங்காயை சேர்த்து நன்கு கலக்கவும்.

    மாங்காய் மசாலாவுடன் கலந்து நன்றாக வதங்கிய பக்குவம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும். சிறிது நேரம் ஆனவுடன் அதை ஒரு ஜாடிக்கு மாற்றவும்.

    கேரள ஸ்டைலில் பொரித்த மாங்காய் ஊறுகாய் பரிமாற தயார்.

  • மாதுளை மில்க் ஷேக் தயார் செய்வது எப்படி?

    பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உடலுக்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் இன்று நாம் இங்கு காண்பது உடலுக்கு மிகவும் சத்தான மாதுளை மில்க் ஷேக்கைத்தான்.

    பொதுவாக மில்க் ஷேக்குகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பு இருக்கும். நீங்கள் உணவுப் பிரியராக இருந்தால் கேட்க வேண்டியதில்லை, விரல் நுனியில் உலகில் கிடைக்கும் அனைத்து வகையான மில்க் ஷேக்குகளும் பெயர்களும் தெரியும்.

    பால் மற்றும் மாதுளை மட்டும் போதும் மாதுளை மில்க் ஷேக்கை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். ஆனால் அதனுடன் ஐஸ்கிரீம், பாதாம், பிஸ்தா, சாக்லேட் சிரப் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

    மேலும் மாதுளையை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் கூட மாதுளை மில்க் ஷேக்கை இப்படி செய்து மகிழ்வியுங்கள். கோடை வெப்பத்தில் உங்கள் உடலை சூட்டை தணிக்க இந்த மாதுளை மில்க் ஷேக்கை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    மாதுளம்பழம் 2

    டம்ளர் பால் 2

    ஐஸ்கிரீம் 2 scoop

    கண்டன்ஸ்டு மில்க் 1 மேஜைக்கரண்டி

    ஏலக்காய் 1

    பாதாம் 1 மேஜைக்கரண்டி

    பிஸ்தா 1 மேஜைக்கரண்டி

    ஸ்ட்ராபெர்ரி சிரப் 1 மேஜைக்கரண்டி

    சாக்லேட் சிரப் தேவையான அளவு

    ஐஸ் கியூப் தேவையான அளவு

    சர்க்கரை தேவையான அளவு

    செய்முறை

    முதலில் மாதுளம் பழத்தை உரித்து, பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அது நன்கு கொதித்து பொங்கி வரும் வரை அதை கொதிக்க வைக்கவும்.

    பால் நன்கு பொங்கிய உடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்ட பின் அதை எடுத்து ஃப்ரிட்ஜில் சுமார் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும்.

    2 மணி நேரத்திற்குப் பிறகு பாலை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.

    அடுத்து நாம் உரித்து வைத்திருக்கும் மாதுளை விதைகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்திருக்கும் பாலில் இருந்து சிறிதளவு சேர்த்து அதனுடன் ஏலக்காய் மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    பின்பு இந்த அரைத்த மாதுளை சாறை ஒரு வடிகட்டியில் ஊற்றி அரை பட்ட விதைகளை வடிகட்டி கொள்ளவும்.

    பிறகு வடிகட்டிய மாதுளை சாறை மீண்டும் அதே மிக்ஸி ஜாரில் ஊற்றி அதில் கண்டன்ஸ்டு மில்க், ஒரு scoop ஐஸ்கிரீம், மீதமுள்ள பால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஐஸ் கியூப்ஸ், மற்றும் ஸ்டாபெர்ரி சிரப்பை சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு டம்ளரை எடுத்து அதில் அரை மேஜைக்கரண்டி அளவு சாக்லேட் சிரப்பை ஊற்றி பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாதுளை சாரை ஊற்றவும்.

    பின்னர் அதன் மேலே சிறிதளவு சாக்லேட் சிரப்பை ஊற்றி அதன் மேலே ஒரு scoop ஐஸ்கிரீமை வைத்து அதன் மேலேயும் சிறிதளவு சாக்லேட் சிரப்பை ஊற்றவும். (ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் அல்லது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது ஐஸ்கிரீமை நாம் தவிர்த்து விடலாம்.)

    கடைசியாக அதன் மேலே நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி சில்லென்று பரிமாறவும். (தேனை விரும்புவர்கள் இதில் சிறிதளவு தேனையும் சேர்த்து கொள்ளலாம்.)

    இப்பொழுது உங்கள் ஆரோக்கியமான மற்றும் சில்லென்று இருக்கும் மாதுளை மில்க் ஷேக் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

  • முருங்கைக்கீரை சூப் வைப்பது எப்படி?

    தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்று முருங்கைக்கீரை சூப்.
    அதுமட்டுமின்றி முருங்கை சூப்பில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால் நாட்டு மருந்து பட்டியலில் முருங்கைக்கீரை இருக்கும்.

    உடலுக்கு மிகவும் தேவையான ஹீமோகுளோபினை இரத்தத்தில் அதிகரிக்கும் தன்மை கொண்ட முருங்கை கீரை நம் உடலுக்கு மிகவும் நல்லது. ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் இந்த முருங்கைக்காய் சூப்பை ஒரு மாதத்திற்கு வாரம் மூன்று முறை குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

    கீரை சூப் சர்க்கரை நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. முருங்கை சூப் செய்ய முருங்கைக்கீரை இருந்தாலே போதும் மற்ற சூப்களை விட மிகவும் எளிதானது மற்றும் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

    ஆனால் முருங்கைக்கீரையை இவ்வாறு சூப்பாக செய்து அவர்களுக்கு கொடுத்தால் அதை அவர்கள் விரும்பி பருகுவார்கள். இன்னும் வேண்டும் என்று அவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    தேவையான பொருட்கள்

    2 கை முருங்கைக்கீரை

    8 to 12 சின்ன வெங்காயம்

    1 தக்காளி

    1 பச்சை மிளகாய்

    2 பூண்டு பல்

    1 துண்டு இஞ்சி

    2 காய்ந்த மிளகாய்

    1 மேஜைக்கரண்டி கடுகு

    ½ மேஜைக்கரண்டி சீரகம்

    ½ மேஜைக்கரண்டி மிளகு தூள்

    ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    செய்முறை

    முதலில் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, இஞ்சி பூண்டை தட்டி, மற்றும் முருங்கைக்கீரையை பூவோடு ஆய்ந்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் சீரகத்தைப் போட்டு அதை வறுக்கவும்.

    சீரகம் வறுபட்டதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் தட்டி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும்.

    தக்காளி நன்கு மசிந்ததும் அதில் மஞ்சள் தூளை போட்டு ஒரு பிரட்டு பிரட்டி அதில் கருவேப்பிலை, கொத்தமல்லி, மற்றும் நாம் ஆய்ந்து வைத்திருக்கும் முருங்கைக்கீரையை போட்டு அதை நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 7 நிமிடம் வரை கொதிக்க விடவும். (3 லிருந்து 4 பேர் குடிப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை இதில் ஊற்றலாம்.)
    7 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை போட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை அதை கொதிக்க விடவும்.

    4 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சூப்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் உடம்பிற்கு இதமான முருங்கைக்கீரை சூப் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

  • தக்காளி தோசை செய்வது எப்படி?

    தோசை தென்னிந்தியாவின் பழமையான உணவுகளில் ஒன்றாகும். இவை மிகவும் பிரபலமான மற்றும் அதிகமான நபர்களால் விரும்பி உண்ணும் காலை உணவு. இதை மிக எளிதாக செய்யலாம்.

    தோசையில் கொழுப்பை உண்டாக்கும் பொருட்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை. மேலும் அவை செய்ய எளிமையான மற்றும் எளிதான உணவு.

    தோசையில் பல வகைகள் உள்ளன, இன்று நாம் இங்கு காண இருப்பது மிகவும் சுவையான மற்றும் தனித்துவமான தக்காளி தோசையாகும். உங்கள் அறிவார்ந்த பசியையும் திருப்திப்படுத்த ஒரு சுவாரஸ்யமான தோசை வரலாற்றைக் கீழே குறிப்பிட்டுள்ளோம். தொடர்ந்து படித்து செய்துபாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    3/4 cup கப் அரிசி

    1/2 cup உளுத்தம் பருப்பு

    3 தக்காளி

    6 காய்ந்த மிளகாய்

    2 பூண்டு பல்

    தேவையான அளவு கொத்தமல்லி

    1/2 tblsp கல்லுப்பு

    தேவையான அளவு நெய்

    செய்முறை

    தக்காளி தோசை செய்வது எப்படி:

    முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்த தக்காளி மற்றும் பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    2 மணி நேரம் கழித்து தண்ணியை நன்கு வடித்து அதை மிக்ஸியில் போட்டு அதனுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பூண்டு, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மற்றும் கல்லுப்பை போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து சுமார் ஒரு மணி நேரம் வரை நன்கு ஊற வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து அந்த மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அதை கரைத்துக் கொள்ளவும்.

    அடுத்து pan ஐ அடுப்பில் வைத்து அதில் அரை ஸ்பூன் அளவு நெய் விட்டு அதை சூடாக்கவும்.

    Pan சூடானவுடன் அதில் தோசையை ஊற்றி அதை சுற்றி ஒரு ஸ்பூன் அளவு நெய் விட்டு சற்று நேரம் வேக விடவும்.

    தோசை லேசாக பொன்னிறம் ஆனதும் அதை திருப்பிப் போட்டு சற்று நேரம் வேக விடவும்.

    தோசை வெந்ததும் அதை சுடச்சுட ஒரு தட்டில் எடுத்து வைத்து உங்களுக்கு விருப்பமான சட்னியுடன் அதை பரிமாறவும்.

  • புரோட்டாவிற்கு சைவ சால்னா செய்வது எப்படி?

    வீட்டில் தோசை இட்லிக்கும், புரோட்டாவிற்கும் எப்போதும் ஒரே சாம்பார் சட்னியை உபயோகித்தால் அலுத்துவிடும்.

    ஒரே செய்முறையை யார் தான் செய்ய விரும்புவர்கள்? எனவே இன்றைய பதிவில் சப்பாத்தி முதல் தோசை வரை கறி இல்லாமல் சுவையான சைவ சால்னா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

    தேவையான பொருட்கள்

    முந்திரி பருப்பு    7

    எண்ணெய்    2 டேபிள் ஸ்பூன்

    பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை தலா    2

    வெங்கயம்    2

    தக்காளி    2

    இஞ்சி, பூண்டு பேஸ்ட்   1 1/2 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் துருவியது  4 டேபிள் ஸ்பூன்

    சின்ன வெங்கயம்   4

    சோம்பு   சிறிதளவு

    மஞ்சள் தூள்   1/4 டேபிள் ஸ்பூன்,

    மிளகாய் தூள்   1 டேபிள் ஸ்பூன்,

    தனியா தூள்   1 டேபிள் ஸ்பூன்,

    கறிமசாலா   1 1/2 டேபிள் ஸ்பூன்

    புதினா, கொத்தமல்லி   சிறிதளவு

    கசகசா    சிறிதளவு

    செய்முறை

    சைவ சால்னா செய்வது எப்படி:

    முதலில் கொஞ்சம் சுடு தண்ணீரில் 7 முந்திரி கசகசா சேர்த்து ஊறவைக்கவும். முந்திரி இல்லையென்றால் பொட்டுக்கடலை சேர்த்து கொள்ளவும்.

    அடுத்து அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து ஒரு முறை வதக்கிக் கொள்ளவும்.

    அடுத்து 2 வெங்காயம் பொடியாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும், பின்பு அதனுடன் 2 தக்காளி சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கிக் கொள்ளவும். வேகமாக வதங்குவதற்கு உப்பு சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.

    அடுத்து அதில் 1.1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும். இப்போது அனைத்தும் வதங்கட்டும்.

    மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும். 4 டேபிள் ஸ்பூன் தேங்காய், 4 சின்ன வெங்காயம், கொஞ்சம் சோம்பு, ஊறவைத்த முந்திரி கசகசா, அதில் இருக்கும் தண்ணீரையும் இதில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    இப்போது வதங்கும் வெங்காயத்தில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் தூள், 1 டீஸ்பூன் தனியா தூள், கறிமசாலா 1 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக வதங்கட்டும். அடுத்து அதில் 1 கைப்பிடி அளவு புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

    பின்பு நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதில் சேர்க்கவும். அதனை கொஞ்ச நேரம் கரண்டி வைத்து கலந்துகொண்டு இருக்கவேண்டும்.

    பின்பு தான் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவேண்டும். அடுத்து உப்பு சரியாக உள்ளதாக என்பதை பார்த்துவிட்டு கொதித்த பின் இறக்கி உங்களுக்கு பிடித்த தோசை, இட்லி, சேர்த்து சாப்பிடலாம்.

  • கிராமத்து முறையில் முட்டை குழம்பு வைப்பது எப்படி?

    முட்டை அனைவருக்கும் பிடித்தமான உணவு. சாதம் அதிகம் சாப்பிடாதவர்கள் கூட முட்டையில் குழம்பு வைத்தால் கொஞ்சம் கூடுதலாகவே உணவு உண்பர். அந்தளவுக்கு முட்டை குழம்பு சுவையாக இருக்கும்.

    முட்டை குழம்பை ஒவ்வொருவரும் விதவிதமான ஸ்டைலில் செய்வார்கள். வேகவைத்த முட்டை உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. முட்டை குழம்பு சுவையான முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    இந்த முட்டை குழம்பை இன்றே வீட்டில் செய்து பாருங்கள்.

    தேவையான பொருட்கள்

    முட்டை – 3

    வெங்காயம் – 1 (நறுக்கியது)

    தக்காளி – 1 (நறுக்கியது)

    கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

    கரம் மசாலா – 1 டீஸ்பூன்

    உப்பு – தேவையான அளவு

    எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

    தாளிக்க

    பட்டை – 1/2

    கறிவேப்பிலை – சிறிதளவு

    கிராம்பு – 1

    அரைக்க தேவையான பொருள்

    தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் – 2

    பூண்டு – 4-5 பற்கள்

    இஞ்சி – 1/2

    மல்லி – 1/2 டீஸ்பூன்

    மிளகு – 1 டீஸ்பூன்

    சீரகம் – 1 டீஸ்பூன்

    செய்முறை

    கிராமத்து ஸ்டைலில் சுவையான முட்டை குழம்பு செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டை வேக வைப்பதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றி, முட்டைகளைப் போட்டு வேக வைத்து முட்டையின் மேல் இருக்கும் ஓடுகளை உடைக்க வேண்டும்.

    பிறகு முட்டையை நீளவாக்கில் இரண்டாக வெட்டி தனியாக வைக்கவும்.

    இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைக்கவும். வாணலியில் மேல் அரைக்க கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் லேசாக வறுத்து எடுத்துவிட்டு, மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

    அதன் பிறகு அடுப்பில் இன்னொரு வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதனுடன் பட்டை, கறிவேப்பிலை மற்றும் கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.

    தாளித்த பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து பொன்னிறத்திற்கு வதக்கவும்.

    வதக்கிய பிறகு உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, 3-4 நிமிடம் வரை கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

    பின் அதில் 1/2 -1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதில் கரம் மசாலா மற்றும் வேக வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சூப்பரான சுவையான கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு தயார்.

    இப்போது சாதத்தில் சுட சுட முட்டை குழம்பை ஊற்றி பரிமாறலாம்.

  • மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃப்ரைட் ரைஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஃப்ரைட் ரைஸ் விரும்பி சாப்பிடுவார்கள்.

    ஃப்ரைட் ரைஸ்ல் பல வகைகள் உள்ளன. அவற்றில் சிக்கன் ப்ரைடு ரைஸ், இறால் பிரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ், வெஜிடபிள் ப்ரைடு ரைஸ், பன்னீர் ப்ரைடு ரைஸ், காளான் பிரைடு ரைஸ் போன்றவை மிகவும் பிரபலம். இன்று இங்கு நாம் காண இருப்பது காளான் ஃப்ரைட் ரைஸ்.

    காளான் பிரைடு ரைஸின் சிறப்பு என்னவென்றால், மற்ற பிரைடு ரைஸை விட இதை செய்வது சற்று எளிதாக இருக்கும். காளான்கள் சமைக்க மிகவும் எளிதானது, எனவே நீங்கள் அதை குறைந்த நேரத்தில் செய்யலாம்.

    மேலும் இவை குழந்தைகள் பள்ளி அல்லது அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்ல சிறந்த மதிய உணவு ரெசிபிகள்.

    தேவையான பொருட்கள்

    1 கப் பாசுமதி அரிசி

    500 கிராம் மஷ்ரூம்

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    2 பச்சை மிளகாய்

    1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கிய பூண்டு

    வினிகர் 2  மேஜைக்கரண்டி

    சோயா சாஸ் 2  மேஜைக்கரண்டி

    ஷஷான் பேஸ்ட் 2  மேஜைக்கரண்டி

    மிளகு தூள் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்

    செய்முறை

    முதலில் ஒரு கப் அளவு பாசுமதி அரிசியை எடுத்து அதில் தண்ணீர் விட்டு நன்கு கழுவி அரை மணி நேரம் வரை அதை ஊற வைக்கவும்.

    அடுத்து வெங்காயம், குடை மிளகாய், பச்சை மிளகாய், மஷ்ரூம், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியன்னை நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.

    பின்பு அரை மணி நேரத்திற்கு பிறகு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடிகட்டி வைத்து கொள்ளவும்.

    பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

    பின்னர் தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்க்கவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).

    பின்பு அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அதனுடன் நாம் ஊற வைத்து வடிகட்டி வைத்திருக்கும் பாசுமதி அரிசியை போட்டு அதை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். (சாதம் முக்கால் பாகம் வெந்தால் போதும்.)

    20 நிமிடத்திற்கு பிறகு சாதம் வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விடவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால் தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாயை மற்றும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூமை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 3 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.

    பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் சோயா சாஸ், வினிகர், மற்றும் ஷஷான் பேஸ்ட்டை சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை வேக விடவும்.

    6 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து வடித்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக சாதம் நன்கு மஷ்ரூமோடு சேருமாறு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியன்னை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான மஷ்ரூம் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி?

    ஆப்பம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிகவும் பிரபலமான காலை உணவாகும். இவை மிகவும் பிரபலமான மற்றும் குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு. ஆப்பத்தில் பல வகைகள் உள்ளன.

    அவற்றுள் குறிப்பிடத்தக்கவை சாதாரண ஆப்பம், தேங்காய் ஆப்பம், இடியாப்பம், முட்டை ஆப்பம், அச்சா ஆப்பம், நெய் ஆப்பம். இன்று நாம் இங்கு நாம் காண இருப்பது பார்ப்பது தேங்காய் பால் ஆப்பம்.

    தேங்காய்ப்பால் ஆப்பம் பற்றிய பெரிய விஷயம் என்னவென்றால், பலர் நினைப்பதை விட இது மிகவும் எளிதானது. இன்றைய இயந்திரமயமான உலகில் கடைகளில் கிடைக்கும் மாவை உடனுக்குடன் பயன்படுத்துவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    அந்த வகையில், கடையில் இருந்து ஆப்பம் செய்ய நாம் பயன்படுத்தும் மாவையே பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். ஆனால் அதிக வேலை இல்லாமல் வீட்டிலேயே மிக எளிதாக தயாரிக்கலாம். அதுமட்டுமின்றி தேங்காய்ப்பால் ஆப்பம் உடலுக்கும் மிகவும் நல்லது.

    உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு தேங்காய் எண்ணெயுடன் ஆப்பம் அல்லது இடியப்பம் சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஏனெனில் தேங்காய்ப்பால் ஆப்பம் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

    மேலும் தேங்காய் பால் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக வயிற்றுப்புண்களுக்கு இது நல்லது. அதனால்தான் அப்பம் பெரும்பாலும் தேங்காய்ப் பாலுடன் பரிமாறப்படுகிறது.

    தேவையான பொருட்கள்

    இட்லி அரிசி 1 கப்

    பச்சரிசி 2 கப்

    துருவிய தேங்காய் 1 கப்

    தேங்காய் 1

    உளுத்தம் பருப்பு 1 மேஜைக்கரண்டி

    வெந்தயம் ½ மேஜைக்கரண்டி

    ஏலக்காய் தூள் ½ மேஜைக்கரண்டி

    சர்க்கரை ½ மேஜைக்கரண்டி

    உப்பு தேவையான அளவு

    செய்முறை

    தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி:

    ஆப்பம் செய்வதற்கு முந்தைய நாளில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, மற்றும் வெந்தயத்தை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 4 மணி நேரம் வரை ஊற விட்டு பின்பு அவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும்.

    இப்பொழுது தேங்காய் பால் செய்வதற்கு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

    அடுத்து இந்த அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதிலிருக்கும் தேங்காய் பாலை பிரித்தெடுத்து அதை ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பிறகு நாம் அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் சர்க்கரை, சிறிதளவு உப்பு, மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி அதை தோசை மாவை விட சிறிதளவு கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும். (மாவு அதிகம் கெட்டியாக இருந்தால் அது சீக்கிரமாக புளிக்காது.)

    பின்னர் மாவு இருக்கும் பாத்திரத்தில் ஒரு மூடியை போட்டு அதை அப்படியே வைத்து சுமார் 6 லிருந்து 8 வரை புளிக்க விடவும்.
    8 மணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் மாவு நன்கு பொங்கி வந்திருக்கும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை தடவி அதை சுட வைக்கவும்.

    கடாய் சிறிது சூடானதும் அதில் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி கடாயை ஒரு இடுக்கியின் மூலமோ அல்லது ஒரு துணியின் மூலமோ பிடித்து பக்குவமாக சுற்றி மாவை பரப்பி விடவும்.

    பிறகு கடாயில் ஒரு மூடியை போட்டு அதை சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வேக விடவும்.

    ஒரு நிமிடத்திற்கு பிறகு தேங்காய் பால் ஆப்பத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சுவையான மற்றும் உடம்புக்கு மிகவும் நன்மையான ஆப்பம் தேங்காய் பால் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.