பழங்கள் மற்றும் பழச்சாறுகள் உடலுக்கு மிகவும் நல்லது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வகையில் இன்று நாம் இங்கு காண்பது உடலுக்கு மிகவும் சத்தான மாதுளை மில்க் ஷேக்கைத்தான்.

பொதுவாக மில்க் ஷேக்குகளுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல வரவேற்பு இருக்கும். நீங்கள் உணவுப் பிரியராக இருந்தால் கேட்க வேண்டியதில்லை, விரல் நுனியில் உலகில் கிடைக்கும் அனைத்து வகையான மில்க் ஷேக்குகளும் பெயர்களும் தெரியும்.

பால் மற்றும் மாதுளை மட்டும் போதும் மாதுளை மில்க் ஷேக்கை வீட்டிலேயே எளிதாக செய்யலாம். ஆனால் அதனுடன் ஐஸ்கிரீம், பாதாம், பிஸ்தா, சாக்லேட் சிரப் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும்.

மேலும் மாதுளையை விரும்பி சாப்பிடும் குழந்தைகள் கூட மாதுளை மில்க் ஷேக்கை இப்படி செய்து மகிழ்வியுங்கள். கோடை வெப்பத்தில் உங்கள் உடலை சூட்டை தணிக்க இந்த மாதுளை மில்க் ஷேக்கை வீட்டிலேயே செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்

மாதுளம்பழம் 2

டம்ளர் பால் 2

ஐஸ்கிரீம் 2 scoop

கண்டன்ஸ்டு மில்க் 1 மேஜைக்கரண்டி

ஏலக்காய் 1

பாதாம் 1 மேஜைக்கரண்டி

பிஸ்தா 1 மேஜைக்கரண்டி

ஸ்ட்ராபெர்ரி சிரப் 1 மேஜைக்கரண்டி

சாக்லேட் சிரப் தேவையான அளவு

ஐஸ் கியூப் தேவையான அளவு

சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

முதலில் மாதுளம் பழத்தை உரித்து, பாதாம் மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாலை ஊற்றி அது நன்கு கொதித்து பொங்கி வரும் வரை அதை கொதிக்க வைக்கவும்.

பால் நன்கு பொங்கிய உடன் அடுப்பை அணைத்து விட்டு அதை அடுப்பிலிருந்து கீழே இறக்கி சிறிது நேரம் ஆற விட்ட பின் அதை எடுத்து ஃப்ரிட்ஜில் சுமார் ஒன்றரை மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும்.

2 மணி நேரத்திற்குப் பிறகு பாலை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து வெளியே வைக்கவும்.

அடுத்து நாம் உரித்து வைத்திருக்கும் மாதுளை விதைகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதில் ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைத்திருக்கும் பாலில் இருந்து சிறிதளவு சேர்த்து அதனுடன் ஏலக்காய் மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரையை சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்பு இந்த அரைத்த மாதுளை சாறை ஒரு வடிகட்டியில் ஊற்றி அரை பட்ட விதைகளை வடிகட்டி கொள்ளவும்.

பிறகு வடிகட்டிய மாதுளை சாறை மீண்டும் அதே மிக்ஸி ஜாரில் ஊற்றி அதில் கண்டன்ஸ்டு மில்க், ஒரு scoop ஐஸ்கிரீம், மீதமுள்ள பால், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஐஸ் கியூப்ஸ், மற்றும் ஸ்டாபெர்ரி சிரப்பை சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு டம்ளரை எடுத்து அதில் அரை மேஜைக்கரண்டி அளவு சாக்லேட் சிரப்பை ஊற்றி பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மாதுளை சாரை ஊற்றவும்.

பின்னர் அதன் மேலே சிறிதளவு சாக்லேட் சிரப்பை ஊற்றி அதன் மேலே ஒரு scoop ஐஸ்கிரீமை வைத்து அதன் மேலேயும் சிறிதளவு சாக்லேட் சிரப்பை ஊற்றவும். (ஐஸ்கிரீமை விரும்பாதவர்கள் அல்லது குழந்தைகளுக்கு கொடுக்கும் போது ஐஸ்கிரீமை நாம் தவிர்த்து விடலாம்.)

கடைசியாக அதன் மேலே நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் பாதாம் மற்றும் பிஸ்தாவை தூவி சில்லென்று பரிமாறவும். (தேனை விரும்புவர்கள் இதில் சிறிதளவு தேனையும் சேர்த்து கொள்ளலாம்.)

இப்பொழுது உங்கள் ஆரோக்கியமான மற்றும் சில்லென்று இருக்கும் மாதுளை மில்க் ஷேக் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.