Author: Arumugam K

  • மாம்பழம் லஸ்ஸி செய்வது எப்படி?

    பொதுவாக கோடை காலம் வந்து விட்டால் உடல் சூட்டை தணிக்க பலர் பழச்சாறுகளை விரும்பி அருந்துவார்கள். அதன்படி, கோடை காலத்தில் சாலையோரங்களில் ஆங்காங்கே புதிய பழச்சாறுகள் விற்கும் கடைகளைக் காணலாம்.

    அந்த அளவுக்கு கோடைக்காலம் வந்தால் பழச்சாறுகளுக்கு மவுசு தானாகக் கூடி விடும். கொளுத்தும் வெயிலில் பழச்சாறு பருகும் இன்பம் தனிதான். எனவே நாம் இன்று காண இருப்பது மாம்பழ லஸ்ஸி.

    பொதுவாக லஸ்ஸிக்கான வரவேற்பு விதிவிலக்கானது. லஸ்ஸியுடன் பழச்சாறு சேர்த்தால் அதன் சுவை இரட்டிப்பாகும். மாம்பழ லஸ்ஸியின் சிறப்பு என்னவென்றால், கண் இமைக்கும் நேரத்தில் செய்வது மிகவும் எளிதானது. அதுமட்டுமல்லாமல் கோடைக்காலத்தில்தான் சுவைக்க முடியும்.

    ஏனென்றால் மற்ற பருவங்களில் நல்ல சுவையுள்ள மாம்பழங்கள் விளைவதில்லை. எனவே மாம்பழ லஸ்ஸி கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும். மாம்பழம் மற்றும் பால் சேர்த்து செய்வதால் உடலுக்கும் மிகவும் நல்லது.

    தேவையான பொருட்கள்

    1 மாம்பழம்

    1 கப் தயிர்

    ½ கப் பால்

    ½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்

    1 மேஜைக்கரண்டி பாதாம்

    1 மேஜைக்கரண்டி பிஸ்தா

    ½ மேஜைக்கரண்டி குங்கும பூ

    தேவையான அளவு சர்க்கரை

    தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ்

    செய்முறை

    முதலில் மாம்பழம், பாதாம், மற்றும் பிஸ்தாவை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மற்றும் ஏலக்காயை தூள் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் அளவு பாலை ஊற்றி அதை நன்கு காய்ச்சி பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரம் ஆற விடவும்.

    பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் மாம்பழத்தை எடுத்து அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 4 லிருந்து 6 மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி ஒரு சுற்று சுற்றி கொள்ளவும்.

    பின்னர் அதில் ஒரு கப் அளவு தயிரை ஊற்றி அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் காய்ச்சி ஆற வைத்திருக்கும் பால், அவரவர் விருப்பத்திற்கேற்ப சர்க்கரை, மற்றும் நாம் தூள் செய்து வைத்திருக்கும் ஏலக்காய் தூளிலிருந்து சுமார் அரை மேஜைக்கரண்டி அளவு சேர்த்து அதை நன்கு அரைத்து கொள்ளவும்.

    லஸ்ஸி கெட்டியாக இருந்தால் அதில் சிறிதளவு பால் அல்லது தண்ணீர் சேர்த்து அதை மீண்டும் அரைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு கிளாஸ் டம்ப்ளரை எடுத்து அதில் அவரவருக்கு விருப்பமான அளவு ஐஸ் க்யூப்ஸ்ஸை போட்டு பின்பு நாம் அரைத்த லஸ்ஸியை அதில் ஊற்றவும்.

    பிறகு அதன் மேலே நாம் நறுக்கி வைத்திருக்கும் பிஸ்தா, பாதாம், மற்றும் குங்குமப்பூவை தூவி அதை சில்லென்று பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் அருமையான சில்லென்று இருக்கும் மாம்பழம் லஸ்ஸி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து பருகி மகிழுங்கள்.

  • பாலக்கீரை பக்கோடா செய்வது எப்படி?

    பக்கோடா என்பது நம்மில் பலருக்கு விருப்பமான உணவு. பொதுவாக வெங்காய பக்கோடா, காலிபிளவர் பக்கோடா, முட்டைக்கோஸ் பக்கோடா, முந்திரிப் பருப்பு பக்கோடா என்று சுவைக்கத்தான் செய்கிறோம். ஆனால் இன்று நாம் காண இருப்பது வித்தியாசமான சத்தான பாலக் கீரை பக்கோடா.

    நம்மில் பலர் மாலையில் சூடான டீ அல்லது காபியுடன் பக்கோடா சாப்பிட்டு மகிழ்வோம். நாம் வழக்கமாக செய்யும் பக்கோடாவுக்கு பதிலாக சத்தான பக்கோடா சாப்பிடுவது எப்படி?

    பாலக் கீரையின் சத்துக்கள் மற்றும் பக்கோடாவின் மொறுமொறுப்புடன், இந்த பாலக் கீரை பக்கோடாக்கள் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள்

    1 கட்டு பாலக் கீரை

    1/2 cup அரிசி மாவு

    1 cup கடலை மாவு

    2 வெங்காயம்

    2 பச்சை மிளகாய்

    1/2 tsp மஞ்சள் தூள்

    1 tsp மிளகாய் தூள்

    1 tsp ஓம விதைகள்

    1/2 tsp பெருங்காய தூள்

    1 சிறு துண்டு இஞ்சி

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு தண்ணீர்

    செய்முறை

    முதலில் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு bowl லை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பாலக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை போட்டு நன்கு கிளறி விடவும்.

    பின்பு அதில் அரிசி மாவு, கடலை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், ஓம விதைகள், பெருங்காய தூள் மற்றும் 1 tsp அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 tsp அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதை நாம் செய்து வைத்திருக்கும் கலவையில் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நம் கைகளின் மூலம் அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பக்கோடாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதை உறுதி செய்த பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் பக்கோடா மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து அதை கவனமாக எண்ணெயில் உதிர்த்து விட்டு அது ஒருபுறம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    ஒருபுறம் பொன்னிறமானதும் அதை மறுபுறம் ஒரு கரண்டியின் மூலம் திருப்பிவிட்டு அந்தப் புறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.

    கடைசியாக கருவேப்பிலையை உருவி அந்தப் பக்கோடாவுடன் போட்டு பொரித்து எடுக்கவும்.

    அவ்வளவுதான் உங்கள் அட்டகாசமான பாலக் கீரை பக்கோடா ரெடி. அதை சுட சுட எடுத்து ஒரு தட்டில் வைத்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • பைனாப்பிள் கேசரி செய்வது எப்படி?

    கேசரி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான இனிப்பு மற்றும் தமிழர்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடையது. தமிழகத்தில் கேசரி இல்லாமல் எந்தப் பண்டிகையோ, பிறந்த நாளோ, விசேஷ நாளோ நிறைவடையாது என்று சொன்னால் அது மிகையாகாது. அதுமட்டுமல்லாமல், பெரும்பாலான திருமண வரவேற்புகளில் கேசரி அவசியம்.

    கேசரியில் பல வகைகள் உண்டு. அவற்றுள் ரவை கேசரி, சேமியா கேசரி, கோதுமை கேசரி, அவல் கேசரி, பழ கேசரி போன்றவை மிகவும் பிரபலம். இன்று நாம் காண இருப்பது பைனாப்பிள் கேசரி.

    இந்த கேசரியின் சிறப்பு என்னவென்றால், இது வெறும் 3 அல்லது 4 பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய மிக எளிதான இனிப்பு. தவிர, நீங்கள் தேவையான பொருட்களை தயார் செய்தால், அவை தயாரிக்க அதிக நேரம் எடுக்காது. எனவே, இல்லத்தரசிகள் எந்த வகையான இனிப்புகளை செய்தாலும் கேசரி தான் முதல் சாய்ஸ்.

    கேசரி செய்ய எளிதான இனிப்பு என்றாலும், சில சமயங்களில் செய்முறைகள் மாறிவிட்டால் ஒன்று குழைந்துவிடும் அல்லது கெட்டியாகிவிடும்.

    ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய செய்முறையை நீங்கள் பின்பற்றினால், இனிப்பான மற்றும் சுவையான பைனாப்பிள் கேசரியை எளிதாக செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    ½ பைனாப்பிள்

    1 கப் ரவை

    1½ கப் சர்க்கரை

    15 to 20 முந்திரி பருப்பு

    10 to 12 உலர் திராட்சை

    ½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்

    5 to 6 சொட்டு பைனாப்பிள் எசன்ஸ்

    மஞ்சள் கலர் தேவையான அளவு 

    எண்ணெய் தேவையான அளவு 

    நெய்  தேவையான அளவு 

    சிறிதளவு குங்கும பூ

    செய்முறை

    முதலில் முந்திரி பருப்பை நறுக்கி, பைனாப்பிளின் தோலை சீவி அதன் நடு பாகத்தை நீக்கி விட்டு சதையை மட்டும் நறுக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் பைனாப்பிள் சதைகளை ஒரு bowl ல் போட்டு அதில் சுமார் ஒன்றரை மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    பின்பு ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு நெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    நெய் சுசூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பை போட்டு அது லேசாக வறுபட்டதும் அதில் உலர் திராட்சையையும் போட்டு முந்திரி பருப்பு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

    முந்திரி பருப்பு பொன்னிறமானதும் அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் அதே pan ல் ரவையை போட்டு அது லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

    ரவை வறுபடுவதர்க்குள் ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து அது லேசாக சுட்டதும் அதில் மஞ்சள் கலரை போட்டு அதை சுட வைக்கவும். (கலர் சேர்ப்பதை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

    தண்ணீர் சூடானதும் அதை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ரவையில் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை குறைத்து வைத்து ரவை நன்கு வேகும் வரை அதை வேக விடவும்.

    ரவை நன்கு வெந்ததும் அதில் சர்க்கரையை சேர்த்து அதை நன்கு ரவையோடு சேருமாறு கலந்து விடவும்.

    பிறகு அதில் பைனாப்பிள் எசன்ஸ்ஸை சுமார் 5 லிருந்து 6 சொட்டு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (எசன்ஸ்ஸை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

    அடுத்து நாம் சர்க்கரையை போட்டு ஊற வைத்திருக்கும் பைனாப்பிளை அதில் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப நெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் ஏலக்காய் தூள் மற்றும் குங்கும பூவை தூவி அதை நன்கு கலந்து விட்டு அது லேசாக கெட்டியாகும் வரை அதை வேக விடவும்.

    அது லேசாக கெட்டியானதும் அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் உலர் திராட்சையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு அதை சிறிது நேரத்திற்கு பிறகு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையாக இருக்கும் பைனாப்பிள் கேசரி தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • மெது வடை செய்வது எப்படி?

    மெது வடை என்பது தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் பிரபலமான சிற்றுண்டி. இது உள்ளே மென்மையாகவும், வெளியில் மொறுமொறுப்பாகவும் இருப்பதால் பலருக்கும் பிடித்தமான சிற்றுண்டியாக அமைகிறது. இவை பொதுவாக காலையில் வெண் பொங்கலுடன் அல்லது மாலையில் தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

    சூடான சாம்பாரில் மெது வடையை போட்டு சுமார் 10 முதல் 15 நிமிடம் ஊற வைத்து அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை தூவி அற்புதமான சாம்பார் வடையாக சாப்பிடலாம். கேரட்டை விரும்புபவர்கள் கேரட்டை துருவி வெங்காயம், கொத்தமல்லி தூவி சாப்பிடலாம்.

    தமிழகத்தில் சாம்பார் வடை பிரியர்களின் தனி கூட்டம் உள்ளது என்றால் மிகையாகாது. சாம்பார் வடையை போன்றே வடையை பல விதமாக சுவைக்கலாம். மெது வடையை தயிரில் போட்டு தயிர் வடை ஆகவும் மற்றும் ரசத்தில் போட்டு ரச வடை ஆகவும் இதை உண்கிறார்கள்.

    தேவையான பொருட்கள்

    1 கப் உளுத்தம் பருப்பு

    1/4 கப் பச்சரிசி

    2 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    1/4 மேஜைக்கரண்டி சீரகம்

    1/2 மேஜைக்கரண்டி மிளகு

    1 துண்டு இஞ்சி

    சிறிதளவு கொத்தமல்லி

    சிறிதளவு கருவேப்பிலை

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் உளுந்து மற்றும் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் 2 மணி நேரம் வரை ஊற வைத்து, வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய், மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து நாம் ஊற வைத்திருக்கும் உளுந்தை முதலில் கிரைண்டரில் போட்டு பின்பு அதனுடன் பச்சரிசியையும் போட்டு நன்கு நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு அந்த மாவில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் இஞ்சி சேர்த்த அதனுடன் சீரகம், மிளகு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது கலந்து வைத்திருக்கும் மாவுடன் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தையும் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (வெங்காயம் தண்ணீர் விடும் தன்மை கொண்டதால் வெங்காயத்தை வடை சுடுவதற்கு முன்பு கடைசியாக சேர்க்கவும்.)

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் வடையை பொரித்து எடுப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடாவதற்குள் ஒரு வாழை இலையில் வடையை தட்டு வதற்கு நன்கு எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளவும். (கையில் தட்டி போட வாட்டம் பெற்றவர்கள் கையிலேயே எண்ணெய்யை தடவி வடையை தட்டி போடலாம்.)

    எண்ணெய் சூடானதும் அதில் ஒரு கை அளவு மாவை எடுத்து இலையில் வைத்து அதை பக்குவமாக தட்டி நடுவில் துளை இட்டு கடாயில் போடவும்.

    பின்பு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு வடை நன்கு பொன்னிறமாக வந்ததும் அதை ஜல்லி கரண்டியின் மூலம் எண்ணெய்யை நன்கு வடித்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    கடாயின் அளவிற்கேற்ப வடைகளை ஒவ்வொன்றாக தட்டி போட்டு எடுத்து சுட சுட சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான மெது வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • கடைகளில் கிடைக்கும் கோதுமை சமோசா செய்வது எப்படி?

    இந்த பதிவின் மூலம் அனைவருக்கும் பிடித்த கோதுமை மாவு சமோசா எப்படி செய்வது என்று படித்து தெரிந்து கொள்ளலாம்.

    சமோசாக்கள் பொதுவாக வெளியில் செல்லும்போது அதிகம் விற்கப்படும் தெரு உணவுப் பொருட்கள். அதன் சுவை தனித்துவமானது என்றாலும்.

    நாம் வீட்டில் செய்ய முடியாது ஏனென்றால் அவர்கள் செய்வது வேறு, ஆனால் நாம் செய்வது வேறு, ஆனால் கடையில் வாங்கும் சமோசா போலவே இருக்க வேண்டும், அதைப் படித்து தெரிந்து கொள்வோம். இந்த பதிவை வைத்து சமோசா செய்யுங்கள்..!

    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு – 200 கிராம்

    மைதா மாவு – 2 ஸ்பூன்

    பெரிய வெங்காயம் – 2

    மஞ்சத்தூள் – 2 டீஸ்பூன்

    மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்

    கரம் மசாலா தூள் – 1/2 ஸ்பூன்

    தனியா தூள் – 1/2 டீஸ்பூன்

    பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை

    சீரகம் – 1/2 ஸ்பூன்

    ரவை – 2 ஸ்பூன்

    இஞ்சி பூண்டு விழுது – 1/2 ஸ்பூன்

    பச்சை மிளகாய் – 1

    கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது அளவு

    உப்பு – தேவையான அளவு

    செய்முறை

    முதலில் கனமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் 200 கிராம் கோதுமை மாவு எடுத்துகொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்துகொள்ளவும்.

    பின்பு ஒரு bowl லை எடுத்து அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை, சிறிதளவு உப்பு, மற்றும் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை சுமார் 6 லிருந்து 8 நிமிடம் வரை பிணைந்து அதை நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டு வரவும்.

    பின்னர் அதை ஒரு மூடி போட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற விடவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் சீரகம், நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் மசித்து வைத்திருக்கும் வெங்காயம், அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தனியா தூள் ஆகிய மசாலாக்களை அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    அது வெந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.

    இப்பொழுது நாம் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

    பின்பு அதை சப்பாத்தி கல்லில் வைத்து அதை சிறிது அடர்த்தியாக சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து அதை பாதியாக ஒரு கத்தியின் மூலம் நறுக்கி கொள்ளவும்.

    அடுத்து நாம் பாதியாக வெட்டிய மாவை எடுத்து கூம்பு வடிவிற்க்கு அதை மடித்து அதனுள் நாம் செய்து வைத்திருக்கும் மசாலாவை வைத்து அதை அடியில் மடித்து அதன் ஓரங்களை சிறிது தண்ணீர் வைத்து மூடவும்.

    இவ்வாறு மீதமுள்ள மாவையும் தயார் செய்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சமோசாவை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் பின் அதில் நாம் செய்து வைத்திருக்கும் சமோசாவை ஒவ்வொன்றாக கடாயின் அளவிற்கேற்ப போட்டு அதை நன்கு பொன்னிறம் ஆகும் வரை வேக விடவும்.

    சமோசா பொன்னிறமானதும் ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு கிண்ணத்தில் வைத்து சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான உருளைக்கிழங்கு சமோசா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • ரவா தோசை செய்வது எப்படி?

    தோசை என்பது தமிழர்களின் பாரம்பரிய உணவு. தமிழ் சமையல் முறையில் மிக நீண்ட வரலாறு உண்டு. தோசை என்பது தமிழ்நாட்டில் வாழும் பல குடும்பங்களின் காலை டிப்பன். இவை பொதுவாக சாம்பார், தேங்காய் சட்னி மற்றும் பருப்பு பொடியுடன் பரிமாறப்படும்.

    தோசையில் பல வகைகள் உண்டு. ப்ளைன் தோசை, கீ ரோஸ்ட், மசால் தோசை, ரவா தோசை, பன்னீர் தோசை, வெங்காய தோசை, கல் தோசை போன்றவை மிகவும் பிரபலம். இவை தமிழ்நாட்டில் உருவானவை என்றாலும் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டன.

    இந்தியாவில் இவை இல்லாத தென்னிந்திய உணவகங்களை நீங்கள் காண முடியாத அளவுக்கு அவை பிரபலமாக உள்ளன. அதுமட்டுமின்றி, இந்தியர்கள் அதிகம் உள்ள அமெரிக்கப் பகுதிகளிலும் அமெரிக்கர்களின் விருப்ப உணவாக இவை மாறிவிட்டன என்றால் மிகையாகாது.

    தேவையான பொருட்கள்

    1 கப் அரிசி மாவு

    1 கப் ரவை

    2 மேஜைக்கரண்டி மைதா மாவு

    2 மேஜைக்கரண்டி தயிர்

    1 பெரிய வெங்காயம்

    1 பச்சை மிளகாய்

    1 துண்டு இஞ்சி

    8 to 10 முந்திரி

    1/2 மேஜைக்கரண்டி மிளகு தூள்

    1/2 மேஜைக்கரண்டி சீரகத் தூள்

    1/4 மேஜைக்கரண்டி எள்

    1/4 மேஜைக்கரண்டி சர்க்கரை

    1 கை அளவு கொத்தமல்லி

    1 கை அளவு கருவேப்பிலை

    தேவையான அளவு உப்பு

    தேவையான அளவு எண்ணெய்

    செய்முறை

    முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் முந்திரியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, ரவை, மற்றும் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கருவேப்பிலை, மற்றும் முந்திரியை சேர்த்து அதனுடன் மிளகு தூள், சீரகத் தூள், எள், தயிர், மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    இப்பொழுது அந்த மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து முதலில் அதை நன்கு கட்டி தட்டாமல் கலந்து கொள்ளவும்.

    மாவை நன்கு கட்டி தட்டாமல் கலந்த பின்பு அதில் மேலும் தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியான பதத்திற்கு கொண்டு வந்து அதை சுமார் 20 லிருந்து 30 நிமிடம் வரை ஊற விடவும்.

    20 நிமிடத்திற்குப் பிறகு மாவு கட்டியாக ஆகியிருந்தால் அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அதை தண்ணீர் பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு கலந்து விடவும்.

    பின்னர் ஒரு தோசைக்கல்லை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து ஒரு பெரிய வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி அந்த கல்லின் மீது வைத்து நன்கு தேய்த்து விடவும்.

    தோசைக்கல் சூடானதும் அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை சுத்தி நன்கு பரவலாக ஊற்றவும்.

    ஆங்காங்கே ஏற்படும் சிறு சிறு குழிகளிலும் தேவைப்பட்டால் சிறிதளவு மாவை ஊற்றி கொள்ளவும்.

    அடுத்து நாம் ஊற்றி வைத்திருக்கும் மாவை சுற்றி தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றவும். (நெய்யை விரும்புபவர்கள் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.)

    தோசை நன்கு பொன்னிறம் வரும் வரை அதை வேக விட்டு பொன்னிறம் வந்ததும் அதை ஒரு தோசை கரண்டியின் மூலம் எடுத்து மடித்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பொதுவாக ரவை தோசையை ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பிப் போட வேண்டிய அவசியமில்லை. எனினும் தேவைப்பட்டால் அதைத் திருப்பிப் போட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பான ரவா தோசை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • காலிஃபிளவர் பட்டாணி குருமா செய்வது எப்படி?

    சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி போன்றவற்றுக்கு இது ஒரு சிறந்த சைட் டிஷ். குறிப்பாக சப்பாத்தி குருமா கலவையின் சுவையே தனி. ஹோட்டல்களில் மட்டுமின்றி பெரும்பாலான வீடுகளில் காலை டிபனாகவோ அல்லது இரவிலோ சமைக்கப்படும் இந்த கலவையானது கூட்டத்தை ரசிக்க வைக்கிறது.

    தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற குருமா, பல்வேறு பொருட்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பின்பற்றி வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களால் வெவ்வேறு வழிகளில் சமைக்கப்படுகிறது.

    குருமாக்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை மட்டன் குருமா, சிக்கன் குருமா, வெஜிடபிள் குருமா, உருளைக்கிழங்கு குருமா மற்றும் காலிஃபிளவர் பட்டாணி குருமா.

    அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் குருமா மற்றும் சைவ பிரியர்களுக்கு காய்கறி மற்றும் காலிஃபிளவர் பட்டாணி குருமா. இவற்றைத் தயாரிக்க தேவையான பொருட்கள் சற்று அதிகமாக இருந்தாலும், தயாரிப்பது எளிது.

    இப்போது சுவையான வெஜிடபிள் பட்டாணி குருமா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    1 medium காலிஃபிளவர்

    1/2 கப் fresh பச்சை பட்டாணி

    2 பெரிய வெங்காயம்

    2 தக்காளி

    1/4 கப் துருவிய தேங்காய்

    2 பச்சை மிளகாய்

    2 பிரியாணி இலை

    1 துண்டு பட்டை

    2 கிராம்பு

    2 ஏலக்காய்

    1/4 மேசைக்கரண்டி கடுகு

    சோம்பு தேவையான அளவு

    இஞ்சி தேவையான அளவு

    2 பூண்டு பல்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள்த் தூள்

    1 மேஜைக்கரண்டி கரம் மசாலா

    2 மேஜைக்கரண்டி மல்லி தூள்

    மிளகாய்த்தூள் தேவையான அளவு

    1 மேஜைக்கரண்டி பொட்டுக்கடலை

    1/2 மேஜைக்கரண்டி சீரகம்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    6 to 7 முந்திரி

    செய்முறை

    முதலில் காலிஃப்ளவர், தக்காளி, மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் செய்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை துண்டு, கிராம்பு, கடுகு, மற்றும் 1 மேஜைக்கரண்டி சோம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

    பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், அவரவர் தேவைக்கேற்ப மிளகாய்த்தூள், கரம் மசாலா, மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

    அடுத்து இதனுடன் காலிஃபிளவர், பச்சை பட்டாணி, மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி ஒரு மூடி போட்டு காய்கறிகள் வேகும் வரை அடுப்பில் வைக்கவும்.

    காய்கறிகள் வேகுவதற்குள் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, அரை மேஜைக்கரண்டி சோம்பு, சீரகம், மற்றும் 6 லிருந்து 7 முந்திரியை ஒன்றாகப் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    காய்கறிகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றி நன்கு கிளறவும். பின்னர் 3 லிருந்து 5 நிமிடம் வரை pan ல் மூடி போட்டு வேக விடவும்.

    குருமாவை இறக்குவதற்கு முன் தேவையான அளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

    இப்பொழுது உங்கள் சூடான, சுவையான மற்றும் மணமான காலிஃபிளவர் பட்டாணி குருமா தயார். இதை வீட்டில் செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.

  • சிக்கன் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃபிரைடு ரைஸ் என்பது உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவு வகை. ஃபிரைடு ரைஸ்ல் பல வகைகள் உள்ளன. சிக்கன் ப்ரைடு ரைஸ், எக் ப்ரைடு ரைஸ், பன்னீர் ப்ரைடு ரைஸ், காளான் பிரைடு ரைஸ், வெஜிடபிள் ப்ரைடு ரைஸ் ஆகியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. இதோ இன்று நாம் காண இருப்பது சிக்கன் ஃப்ரைடு ரைஸ்.

    சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என்பது இளைய தலைமுறையினரிடையே தனித்தன்மை வாய்ந்தது. பிறந்தநாள் கொண்டாட்டமாக இருந்தாலும் சரி, நண்பர்கள் மத்தியில் பார்ட்டியாக இருந்தாலும் சரி, சிக்கன் ஃப்ரைடு ரைஸ்தான் அவர்களுக்குப் பிடித்தமானவை.

    பொதுவாக, க்ரில் செய்யப்பட்ட சிக்கன், தந்தூரி சிக்கன், சில்லி சிக்கன் அல்லது சிக்கன் பட்டர் மசாலாவுடன் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ஆகியவை மிகவும் பிடித்தமான கலவையாகும்.

    சிக்கன் ஃப்ரைடு ரைஸ் என்பது நம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் ஒன்று. எனவே, உணவகங்கள் மற்றும் துரித உணவு விற்பனை நிலையங்களில் அவற்றை வாங்குவதற்குப் பதிலாக, அதே சுவையான உணவக பாணி சிக்கன் பிரைடு ரைஸை வீட்டிலேயே சுகாதாரமான முறையில் செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    1/2 கிலோ பாசுமதி அரிசி

    1/2 கிலோ சிக்கன்

    3 முட்டை

    2 கேரட்

    6 to 8 பீன்ஸ்

    1/2 முட்டைகோஸ் சிறியது

    1 1/2 பெரிய வெங்காயம்

    1 1/2 குடை மிளகாய்

    6 பூண்டு பல்

    1 துண்டு இஞ்சி

    1 பச்சை மிளகாய்

    1/2 எலுமிச்சம் பழம்

    ஒரு கை அளவு ஸ்பிரிங் ஆனியன்

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    வெள்ளை மிளகுத் தூள்  1 மேஜைக்கரண்டி 

    சோயா சாஸ்  1 1/2 மேஜைக்கரண்டி 

    சில்லி சாஸ்  1 1/2 மேஜைக்கரண்டி 

    மிளகாய் தூள் தேவையான அளவு 

    உப்பு  தேவையான அளவு 

    எண்ணெய்  தேவையான அளவு 

    செய்முறை

    முதலில் பாசுமதி அரிசியை எடுத்து அதை தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்து சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    பின்பு வெங்காயம், கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஸ்பிரிங் ஆனியனை தயார் செய்து, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாரை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    பின்னர் ஒரு bowl ல் நாம் நறுக்கி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு கொள்ளவும்.

    பின்பு அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மிளகு தூள், மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டிலிருந்து அரை மேஜைக்கரண்டி சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை ஊற விடவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய்சூடானதும் அதில் pan ன் அளவிற்கேற்ப நாம் ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை பக்குவமாக போட்டு ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு அதை நன்கு வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் ஒவ்வொன்றாக முட்டைகளை உடைத்து ஊற்றி அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை ஒரு கரண்டியின் மூலம் வதக்கி முட்டை சிறிது வெந்ததும் ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும்.
    தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை ஊற்றவும். (அப்போது தான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).

    அடுத்து அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.

    பின்பு நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை நன்கு வடிகட்டி அதில் போட்டு பாசுமதி அரிசியை சுமார் 15 லிருந்து 20 நிமிடம் வரை வேக விடவும். (பாசுமதி அரிசியை முக்கால் பாகம் மட்டுமே வேக வைக்கவும்.)

    சாதம் முக்கால் பாகம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால்தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும். (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் 3 லிருந்து 4 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.)

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நன்கு பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை அதில் போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கி கொள்ளவும்.

    அடுத்து அதில் தேவையான அளவிற்கு உப்பு, சோயா சாஸ், மற்றும் சில்லி சாஸ் சேர்த்து அதை நன்கு கிளறவும்.

    காய்கறிகள் வெந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.

    இப்பொழுது ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து இதில் சேர்த்து சாதம் உடையாமல் பக்குவமாக நன்கு கிளறி விடவும்.

    அடுத்து அதில் நாம் பொரித்து எடுத்து வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளையும் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் வெள்ளை மிளகுத் தூள் மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் 2 நிமிடங்கள் வரை கிளறவும்.

    பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட கெட்சப் உடன் பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • எல்லோருக்கும் பிடித்த சேமியா உப்புமா செய்வது எப்படி?

    உப்புமா என்பது இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் பிரபலமான உணவாகும். உப்புமாவில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா, அவல் உப்புமா, அரிசி உப்புமா, சேமியா உப்புமா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    இங்கு நாம் பார்ப்பது சேமியா உப்புமா. பலர் இதை பெரும்பாலும் காலை டிபன் அல்லது மாலை டிபன் என செய்து ருசிப்பார்கள். இவற்றை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் அடிக்கடி சாப்பிடுவார்கள். கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி என பல்வேறு காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது.

    சேமியா உப்புமாவிற்கு தேவையான பொருட்களை முதலில் தயார் செய்தால் இதை எளிதாக செய்யலாம். இதனால் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    காலையில் அவசரமாக பள்ளிக்குசெல்லும் குழந்தைக்கும், அலுவலகம் செல்லும் கணவருக்கும் குறைந்த நேரத்தில் இது போன்ற சத்தான உணவை தயாரித்து கொடுத்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

    தேவையான பொருட்கள்

    1 கப் சேமியா

    2 பெரிய வெங்காயம்

    1 தக்காளி

    6 to 7 பின்ஸ்

    2 கேரட்

    1/2 கப் பச்சை பட்டாணி

    1 முதல் 4 பச்சை மிளகாய்

    5 to 6 முந்திரி

    1 துண்டு இஞ்சி

    1/2 மேஜைக்கரண்டி கடலை பருப்பு

    1/2 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு

    1/4 மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    5 வெந்தயம்

    1/4 மேஜைக்கரண்டி சீரகம்

    1/4 மேஜைக்கரண்டி கடுகு

    சிறிதளவு கருவேப்பிலை

    சிறிதளவு கொத்தமல்லி

    தேவையான அளவு எண்ணெய்

    தேவையான அளவு உப்பு

    செய்முறை

    முதலில் வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி, இஞ்சி, மற்றும் பச்சை மிளகாயை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் சேமியாவை போட்டு அதை பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய்யை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், மற்றும் சீரகத்தை போட்டு அதை வறுக்கவும்.

    அடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கருவேப்பிலை, முந்திரி, மற்றும் இஞ்சியை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    இஞ்சியின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.

    2 நிமிடத்திற்கு பிறகு அதில் சுமார் 2 கப் அளவு தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 லிருந்து 5 நிமிடம் வரை காய்கறிகள் நன்கு வெந்து தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

    தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் சேமியாவை போட்டு அதை பக்குவமாக நன்கு கலந்து விடவும்.

    பின்பு சேமியா வெந்து தண்ணீர் நன்கு வற்றும் வரை அதை அப்படியே அடுப்பில் வேக விடவும்.

    சேமியா நன்கு வெந்து தண்ணீர் வற்றியதும் அதை இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி அதை சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான சேமியா உப்புமா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • எக் ஃப்ரைட் ரைஸ் செய்வது எப்படி?

    ஃபிரைடு ரைஸ் சீனாவில் உருவானது என்றாலும், இந்தியாவிலும் இது மிகவும் பிரபலமானது. துரித உணவு என்பது இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான உணவு வகை. ஃபிரைடு ரைஸ் பாஸ்ட் புட் என்றால் கேட்க வேண்டியதில்லை. ஃபிரைடு ரைஸ் பல வகைகள் உள்ளன.

    சிக்கன் ப்ரைடு ரைஸ், பனீர் ப்ரைடு ரைஸ், காளான் பிரைடு ரைஸ், வெஜிடபிள் ப்ரைடு ரைஸ். ஃபிரைடு ரைஸில் பல வகைகள் இருந்தாலும், முட்டை பிரைடு ரைஸ் என்பது ஒரு சிறப்பு இனம்.

    சிக்கன் பட்டர் மசாலா, சில்லி சிக்கன் அல்லது பனீர் பட்டர் மசாலாவுடன் முட்டை பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமான கலவையாகும்.

    முட்டை மற்றும் காய்கறிகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் அவை சத்து நிறைந்தவை. இருப்பினும், வயதானவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட வேண்டும்.

    உணவகங்களில் அல்லது துரித உணவை சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டில் தயாரிப்பது ஆரோக்கியமானது. ரெஸ்டாரண்டில் ஃப்ரைடு ரைஸ் செய்வது போல, வீட்டிலேயே செய்யலாம்.

    இப்போது எக் ப்ரைடு ரைஸ் செய்வதற்கான பொருட்கள் மற்றும் எளிய செய்முறையை கீழே பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    250 கிராம் பாசுமதி அரிசி

    4 முட்டை

    1 கேரட்

    5 பீன்ஸ்

    1 பெரிய வெங்காயம்

    1 குடை மிளகாய்

    1 கையளவு ஸ்பிரிங் ஆனியன்

    எண்ணெய் தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    1 மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத் தூள்

    1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்

    1 மேஜைக்கரண்டி சில்லி சாஸ்

    8 பல் பூண்டு பொடியாக நறுக்கியது

    1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது

    செய்முறை

    முதலில் பாசுமதி அரிசியை எடுத்து தண்ணீரில் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    அரை மணி நேரத்திற்கு பிறகு அதை எடுத்து தண்ணீரை நன்கு வடிகட்டி கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
    (அப்போதுதான் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்).

    அடுத்து அதில் உப்பு சேர்த்து ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை அதில் போட்டு பாசுமதி அரிசியை 15 லிருந்து 20 நிமிடம் வேக வைக்கவும். (முக்கால் பாகம் வேகும் அளவிற்கு.)

    சாதம் வெந்ததும் தண்ணீரை வடித்து அதை ஒரு தட்டில் கொட்டி பரப்பி வைக்கவும். (அதில் இருக்கும் ஈரப்பதம் நன்கு உலர்ந்தால்தான் சாதம் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும்.)

    இப்பொழுது கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை நறுக்கி வைத்து கொள்ளவும்.

    அடுத்து பச்சை மிளகாய் மற்றும் பூண்டை எடுத்து நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan ஐ மிதமான தீயில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சுட வைக்கவும். (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் செய்வதாக இருந்தால் 3 லிருந்து 4 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.)

    எண்ணெய் சூடானதும் அதில் ஒவ்வொன்றாக முட்டைகளை உடைத்து ஊற்றி சுமார் 4 லிருந்து 5 நிமிடம் முட்டையை சிறிது வேகும் வரை வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு அதே pan ல் நன்றாக பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை அதில் போடவும்.

    பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாயை அதில் போட்டு முக்கால் பாகம் வேகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளவும்.

    தேவையான அளவிற்கு உப்பு, ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறவும்.
    காய்கறி வெந்ததும் அடுத்து அதனுடன் செய்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து நன்கு கிளறவும்.

    இப்பொழுது ஆற வைத்துள்ள சாதத்தை எடுத்து அதனுடன் சேர்க்கவும். சாதம் உடையாமல் மெதுவாக கவனமாக கிளறவும்.

    பிறகு ஒரு மேஜைக்கரண்டி வெள்ளை மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய ஸ்பிரிங் ஆனியன் ஐ சேர்த்து மீண்டும் மிதமான சூட்டில் இரண்டு நிமிடங்கள் வரை கிளறவும்.

    பின்பு அதை எடுத்து ஒரு பவுலில் போட்டு சிறிது ஸ்பிரிங் ஆனியன் ஐ மேலே தூவி அலங்கரிக்கவும்.

    இப்பொழுது உங்கள் சூடான சுவையான எக் ஃப்ரைட் ரைஸ் தயார்.
    இதை உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் உண்டு மகிழுங்கள்.