Author: Arumugam K

  • சமைக்கும் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்!

    சமையல் ஒரு அற்புதமான கலை. ஆரோக்கியத்தில் சமையல் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் சில பிரச்சனைகள் வராது. குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை ஊட்ட விரும்பும் பெற்றோர்கள் சமையலையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

    இன்றைய தலைமுறையினர் சமைப்பதை ஒரு வேலையாக பார்க்கிறார்கள். கத்தியைப் பிடிக்கத் தெரியாததாலும், வெங்காயத்தை வெட்டும்போது கண்ணில் நீர் கசிவதாலும் பலர் சமையலறையைத் தவிர்க்கிறார்கள்.

    சமையல் அறையிலும், சமைக்கும் போதும் தவிர்க்க வேண்டிய தவறுகளை அறிந்தால் யாரும் சமையலறைக்குள் நுழைய தயக்கம் காட்டமாட்டார்கள்.

    சமையலின் போது செய்யக் கூடாதவை

    சமையலறையில் பலரும் சிரமமாக கருதும் மிக எளிதான வேலை காய்கறிகளை நறுக்குவது. காய்கறிகள் நறுக்க அல்லது வெட்ட பயன்படுத்தும் கத்தியின் பிடிப்பு வாட்டமாகவும் வெட்டும் பகுதி நீளமாகவும் இருப்பது அவசியம். கத்தி பிடிக்கும் பகுதியை விட வெட்டும் பகுதி நீளமாக இருக்க வேண்டும். பத்து ரூபாய்க்கு கிடைக்கும் கத்தியை பயன்படுத்தாதீர்கள்.

    கூர்மையான கத்தி இல்லாத பட்சத்தில் அருகமனை பயன்படுத்துவது நல்லது.

    ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் உபயோகம் செய்யாதீர்கள்.

    பூரி சுடுவதற்கு பயன்படுத்திய் எண்ணெய்யை தோசை ஊற்ற பயன்படுத்துவது, கடுகு தாளிப்புக்கு ஊற்றுவது என இவை அனைத்துமே தவறு.

    உபயோகப்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் Trans fat உண்டாகும். இதை சாப்பிடுவதால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும்.

    பூரி சுடுவதற்கு, அப்பளம் பொரிப்பதற்கு சின்ன கடாய் பயன்படுத்தி எண்ணெய்யை மிச்சம் செய்யலாம்.

    கேசரி பவுடர் உபயோகிப்பதை தவிர்க்கவும். இது முழுக்க முழுக்க நிறமி மட்டுமே. இதனால் எந்த பயனும் கிடையாது.

    சமையலுக்கு பயன்படுத்தும் பேன் டெஃப்லான் கோட்டிங் செய்யப்பட்டதாக பயன்படுத்தாதீர்கள். இது உடல் நலனுக்கு கேடு.

    காய்கறி வேக வைத்த பிறகு அந்த தண்ணியை கீழே ஊற்றி வீண் செய்யாமல் சப்பாத்தி மாவு பிசைய, சாம்பார் வைக்க பயன்படுத்தலாம். இதனால் காய்கறிகளில் இருந்து கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து வீண் ஆகாது.

    இறைச்சியை கடைகளில் இருந்து வாங்கி வந்த பிறகு அதை அன்றே சமைத்துவிடுங்கள். பிரிட்ஜில் வைத்து இரண்டு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து பாதி சமைத்துவிட்டு மீதி பாதியை உள்ளே வைப்பது அல்லது முழுவதையும் சமைத்து மிச்சத்தை பிரிட்ஜில் வைத்து இரண்டு நாட்கள் கழித்து சூடுபடுத்தி சாப்பிடுவது உடலுக்கு தீங்கு. இதனால் தான் உணவு நஞ்சாக மாறுகிறது.

    வெங்காயத்தை குளிர்ந்த நீரில் கழுவி வெட்டினால் கண்களில் இருந்து தண்ணீர் வராது.

  • செட்டிநாடு ரங்கூன் ஸ்வீட் செய்வது எப்படி?

    செட்டிநாடு அதன் சமையலுக்கு மட்டுமின்றி இனிப்பு வகைகளுக்கும் பிரபலமானது. ரங்கூன் ஸ்வீட் என்பது செட்டிநாடு பகுதியில் உள்ள ஒரு சிறிய சிறப்பு இனிப்பு வகைகளில் ஒன்று.

    வெல்லம் சேர்த்து செய்யக்கூடிய கேசரி வகை இது. இந்த இனிப்பு திருமண நிகழ்வுகளில் வழங்கப்படுகிறது. கேசரி என்று நினைப்போம். ஆனால் அது ரங்கூன் ஸ்வீட். ரங்கூன் ஸ்வீட் மிகவும் எளிதான செய்யக்கூடிய இனிப்பு.வாங்க செய்து ருசிக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    ரவை

    முந்திரி

    திராட்சை

    நெய்

    தேங்காய்

    வெல்லம்

    ஏலக்காய் தூள்

    செய்முறை

    இந்த இனிப்பு தயாரிப்பில் முதல் படி முந்திரி, திராட்சையை நெய்-ல் வறுப்பது. பேனில் ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்றி 20 முந்திரி போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.

    அடுத்ததாக உலர் திராட்சை 25 கிராம் போட்டு வறுத்தால் அது நன்கு உப்பி வரும்.

    இவை இரண்டையும் தனியாக வைக்கவும். அதே பேனில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி அரை மூடி தேங்காயை துருவி நெய்-ல் போட்டு வறுங்கள்.

    2-3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுத்த பிறகு அடுப்பை ஆஃப் செய்யுங்கள்.

    அடுத்ததாக ஒரு கப் வெல்லத்தை கடாயில் போட்டு அதற்கு 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

    இந்த வெல்ல தண்ணீர் ரங்கூன் புட்டு செய்வதற்கு முக்கியமானது. ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும்.

    கடாயில் ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றி அது உருகிய பிறகு 250 கிராம் ரவை போட்டு வறுக்கவும். ரவை நன்கு வறுப்பட்டால் நல்ல வாசனையை நுகர முடியும்.

    இப்போது வெல்ல தண்ணீரை வடிகட்டி ரவை மீது ஊற்றவும். ரவையை வெல்ல தண்ணீரிலேயே வேக வைக்கவும்.

    இனிப்பு அதிகமாக வேண்டுமானால் வெல்லம் ஒன்றரை கப் சேர்க்கலாம்.

    ரவை கொஞ்சம் கொஞ்சமாக கெட்டி ஆக மாற ஆரம்பிக்கும்.

    அடுத்ததாக கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள், வறுத்து வைத்திருக்கும் முந்திரி & திராட்சை மற்றும் தேங்காய் சேர்த்து கலந்து விடுங்கள்.
    இவற்றை சேர்த்த பிறகு ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றுங்கள்.

    கடாயை குறைந்த தீயில் வைத்து மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

    ரவை நன்றாக வெந்து தண்ணீர் வற்றி இருக்கும். இறுதியாக மீண்டும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். ரவை இதை உடனடியாக உறிஞ்சி விடும்.

  • நவரத்ன புலாவ் செய்வது எப்படி?

    பிரியாணியில் பல வகைகள் உண்டு. ஆனால் புலாவ்களில் பல வகைகள் உண்டு என்கிறார்கள். இது நூற்றுக்கு நூறு உண்மை. இன்று நாம் காண இருக்கும் புலாவ்களில் ஒன்றான, ஒரு சிறப்பு மற்றும் வித்தியாசமான நவரத்ன புலாவ் உள்ளது.

    உங்கள் அறிவுப் பசியையும் திருப்திப்படுத்த சில சுவாரஸ்யமான நவரத்னா புலாவ் வரலாற்றுக் குறிப்புகள் கீழே உள்ளன.

    நவரத்ன புலாவ் மிகவும் சிறப்பான மற்றும் ரிச்சான உணவு. பண்டிகைக் காலங்களில் அல்லது மங்களகரமான நாட்களில் நாம் செய்யும் உணவுகளுக்கு இது ஒரு அற்புதமான மாற்றாகும்.

    வரும் பண்டிகை நாளில் இந்த நவரத்ன புலாவ்வை முயற்சி செய்து உங்கள் விருந்தினர்களை ஆச்சரியப்படுத்துங்கள். கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    1 cup பாசுமதி அரிசி

    200 gms பன்னீர்

    1 கை பச்சை பட்டாணி

    15 பீன்ஸ்

    4 கேரட்

    1/4 காலிபிளவர்

    1 உருளைக்கிழங்கு

    1/2 வெங்காயம்

    15 முந்திரிப் பருப்பு

    பாதாம் பருப்பு  15

    10 உலர் திராட்சை

    குங்குமப்பூ பால் 10 tsp

    1 tsp ஷாஹி ஜீரா

    மிளகு 1 tsp

    1/2 tsp எலுமிச்சை சாறு

    2 பிரியாணி இலை

    3 ஏலக்காய்

    2 இலவங்கப்பட்டை

    7 கிராம்பு

    1 நட்சத்திர சோம்பு

    தேவையான அளவு உப்பு

    நெய்  தேவையான அளவு

    எண்ணெய்  தேவையான அளவு

    தண்ணீர்  தேவையான அளவு

    செய்முறை

    முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    அடுத்து பீன்ஸ், கேரட், காலிபிளவர், உருளைக்கிழங்கு, வெங்காயம், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, மற்றும் பன்னீரை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, மற்றும் எலும்பிச்சம்பழத்தைப் பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    பின்பு சுமார் பத்து மேஜைக்கரண்டி அளவு பாலில் குங்குமப்பூவை போட்டு அதை சுடவைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து வெங்காயம் நன்கு பொன் நிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதில் கவனமாக நாம் ஊற வைத்திருக்கும் பாசுமதி அது அரிசியை போடவும்.

    பின்பு அதில் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அதை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    நெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் பருப்பை போட்டு அது நன்கு பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.

    அவை பொன்னிறமானதும் அதில் உலர் திராட்சையை சேர்த்து சுமார் அரை நிமிடம் வரை வறுத்து எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

    பின்பு pan னில் சற்று நெய்யை சேர்த்து அதில் நம் நறுக்கி வைத்திருக்கும் பன்னீர் துண்டுகளை ஒவ்வொன்றாக வைத்து வறுக்கவும். பன்னீர் துண்டுகளை சீரான இடைவெளியில் திருப்பி போட்டு எல்லா பக்கமும் நன்கு வறுத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.

    அடுத்து pan னில் மீண்டும் சற்று நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

    ஒரு நிமிடத்திற்க்குப் பிறகு அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    பின்பு pan னில் மீண்டும் சற்று நெய்யை சேர்த்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிபிளவர், பீன்ஸ், மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.

    ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விட்டு ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ரெண்டு மேஜைகரண்டி அளவு நெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.

    நெய் சுட்டதும் அதில் பிரியாணி இலை, ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர சோம்பு, மிளகு, மற்றும் ஷாஹி ஜீராவை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.

    அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அதை நன்கு பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் கிளறி விடவும்.

    பின்பு அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் காய்கறிகள் மற்றும் வறுத்து எடுத்து வைத்திருக்கும் பன்னீரை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள்).

    அடுத்து இதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் குங்குமப்பூ பாலை சேர்த்து அதை நன்கு பக்குவமாக கிளறி விடவும்.
    பின்பு அதில் நாம் வறுத்தெடுத்து வைத்திருக்கும் முந்திரி பருப்பு பாதாம் பருப்பு மற்றும் திராட்சையை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.

    இப்பொழுது நாம் வறுத்து எடுத்து வைத்திருக்கும் வெங்காயத்தை இதன் மேலே தூவி ஒரு மூடி போட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை அதை வேக விடவும்.

    ஐந்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து நவரத்ன புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

  • அவல் கொழுக்கட்டை செய்வது எப்படி?

    கோடை விடுமுறைகள் குழந்தைகளுக்கு உற்சாகமாக இருந்தாலும், பெற்றோருக்கும் சவாலாக இருக்கும். பள்ளிக்குச் சென்றாலும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் சத்தான உணவையே உண்கின்றனர்.

    ஆனால் கோடை விடுமுறை என்பதால் நாள் முழுவதும் விளையாடுவது, தாமதமாக சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் அதிகம். இந்த காலகட்டத்தில் குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்குவது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும்.

    நம் முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளில் இதுவும் ஒன்று. இதில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீஸ், மெக்னீசியம், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற பல்வேறு சத்துக்கள் இருப்பதால் உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடல் சூட்டை தணித்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

    இந்த அவல் கொழுக்கட்டை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம். அதைப் பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

    தேவையான பொருட்கள்

    அவல் – 1 கப்

    வெல்லம் – அரை கப்

    தண்ணீர் – கால் கப்

    தேங்காய் துருவியது – கால் கப்

    ஏலக்காய் பொடி – சிறிதளவு

    நெய்- தேவையான அளவு

    செய்முறை

    அவல் கொழுக்கட்டை செய்வதற்கு முதலில் அவலை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இதையடுத்து ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை அரை கப் தண்ணீர் ஊற்றி உருகியதும் இறக்கி விடவும். சூடு ஆறியதும் வடிகட்டிக் கொள்ளவும்.

    வடிகட்டி வைத்துள்ள வெல்லத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்துக கிளறவும். பின்னர் அரைத்த அவலையும் சேர்த்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

    ஓரளவிற்குக் கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

    இந்த அவல் கலவையை வழக்கம் போல கொழுக்கட்டை எப்படி பிடிப்போமோ? அதுபோன்று பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக வைத்தால் போதும் சுவையான அவல் கொழுக்கட்டை ரெடி.

    ஒருவேளை உங்களுக்கு இனிப்பு கொழுக்கட்டை பிடிக்கவில்லையென்றால், தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைப்பதற்கு முன்னதாக வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவற்றை வதக்கிக்கொள்ளவும். பின்னர் வழக்கம் போல கொழுக்கட்டையை தயார் செய்யலாம்.

  • இளநீர் பாயாசம் செய்வது எப்படி?

    நம் வீடுகளில் எந்த ஒரு சுப நிகழ்ச்சி நடந்தாலும் அதில் ஏதோ ஒரு இனிப்பு நிச்சயம் இருக்கும். குறிப்பாக லட்டு, ஜாங்கிரி, அல்வா, பாயசம் என சகலமும் இருக்கும். அதனால் இன்று நாம் இளநீர் பாயாசம் செய்வது பற்றி தெரிந்துகொள்வோம்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இளநீர் பாயசத்தை விரும்பி சாப்பிடுவதால், உடலுக்கு என்ன நன்மைகள்? அதைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். இளநீரில் உள்ள புரதங்கள் தாய்ப்பாலில் உள்ள அதே ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன.

    குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்க வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும், இளநீரில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் கால்சியம் போன்ற உடலுக்கு ஆற்றலை வழங்கும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

    எனவே பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ்களுக்குப் பதிலாக இளநீரைக் குடிக்க மறக்காதீர்கள். உங்களுக்கான செய்முறை குறிப்புகள் இதோ..

    தேவையான பொருட்கள்

    கெட்டியான பால்- ஒரு லிட்டர்

    இளநீர் வழுக்கை – 2 கப்

    தேங்காய் பால் – 2 கப்

    சர்க்கரை – ஒரு கப்

    ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்

    முந்திரி – 20

    நெய்- தேவையான அளவு

    செய்முறை:

    இளநீர் பாயாசம் செய்வதற்கு முதலில் இளநீரை வெட்டி அதில் உள்ள வழுக்கைத் துண்டுகளைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    இதில் ஒரு பகுதியை சர்க்கரையுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    இதையடுத்து அடி கனமாக பாத்திரத்தில் ஒரு லிட்டர் பாலை ஊற்றி தண்ணீர் ஊற்றாமல் கெட்டியாக காய்ச்சிக் கொள்ள வேண்டும். பால் நன்கு கெட்டிப் பதத்திற்கு வந்ததும் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள இளநீர் வழுக்கை மற்றும் அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் போன்றவற்றைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    இவையனைத்தும் நன்கு கெட்டியான பதத்திற்கு வந்ததும், தேங்காயை அரைத்து எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை உடன் சேர்க்கவும்.

    இறுதியில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி, 2 ஏலக்காய் சேர்த்து பொரித்து கொட்டினால் போதும். சுவையான இளநீர் பாயாசம் ரெடி.

    இந்த பாயாசத்தைக் குழந்தைகளுக்குப் பிடித்தார் போன்று செய்ய வேண்டும் என்றால், இளநீர் பாயாசத்தின் மேல் இளநீர் வழுக்கைத் துண்டுகள் மற்றும் சிறிதளவு முந்திரி, பாதாம் போன்றவற்றை மேல் வைத்து அலங்கரித்தால் போதும். நிச்சயம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பிச்சாப்பிடுவார்கள்.

  • வெள்ளரி புதினா லெமனேட் தயார் செய்வது எப்படி?

    கோடைக்காலம் வந்துவிட்டால், பழம் மற்றும் பழச்சாறு தானாகவே மவுசு வந்துவிடும். உடல் சோர்வு, உஷ்ணத்தைப் போக்க பலர் ஜூஸ் கடைகளைத் தேடி அலைவதை நாம் காணலாம்.

    அப்படியென்றால் இன்று நாம் இங்கு காண இருப்பது வெள்ளரிக்காய் புதினா லெமனேட். பொதுவாக வெள்ளரி மற்றும் எலுமிச்சை மிகவும் குளிர்ச்சி தரும்.

    இரண்டையும் சேர்த்து இந்த ஜூஸ் செய்வதன் மூலம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். வெள்ளரிக்காய் புதினா எலுமிச்சைப் பழத்தின் சிறப்பு என்னவென்றால், மற்ற பழச்சாறுகளைப் போல இதற்கு நாம் அதிகம் செலவு செய்யத் தேவையில்லை.

    இந்த வெள்ளரி புதினா லெமனேட் மிகக் குறைந்த செலவில் வீட்டிலேயே செய்வது எளிது. இந்த வெள்ளரிக்காய் புதினா லெமனேட் இந்த கோடை வெயிலுக்கு ஏற்றது, பள்ளியில் குழந்தைகளுக்கு பாட்டிலில் அடைத்தாலும் அல்லது அலுவலகத்திற்கு எடுத்துச் செல்வது மிகவும் சுலபம்.

    தேவையான பொருட்கள்

    1 பெரிய வெள்ளரிக்காய்

    15 to 20 புதினா இலைகள்

    5 எலுமிச்சை பழம்

    சர்க்கரை தேவையான அளவு

    உப்பு தேவையான அளவு

    ஐஸ்க்யூப்ஸ் தேவையான அளவு

    செய்முறை

    முதலில் பெரிய வெள்ளரிக்காயின் தோலை சிவி அதை சிறு சிறு துண்டுகளாக ஆக்கி மற்றும் புதினா இலைகளை தயார் செய்து வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் அளவு சர்க்கரையை போட்டு அதில் அரை கப் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கரண்டியின் மூலம் சர்க்கரை நன்கு கரையும் வரை அதை கிண்டி விடவும்.

    சர்க்கரை நன்கு கரைந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த பாத்திரத்தை அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.

    பின்பு எலுமிச்சம் பழங்களை பாதி பாதியாக வெட்டி அதை ஒரு squeezer ல் வைத்து பிழிந்து சாறை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் 4 அல்லது 6 புதினா இலைகளை போட்டு வைக்கவும்.

    பிறகு நாம் நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரி துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 8 லிருந்து 10 புதினா இலைகளையும் போட்டு நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறை சிறிதளவு ஊற்றி அதை நன்கு அரைக்கவும்.

    பின்னர் அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அந்த சாறை எடுத்து நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறுடன் சேர்த்து அதை நன்கு கலக்கி விடவும்.

    அடுத்து அதில் நாம் செய்து வைத்திருக்கும் சர்க்கரை சிரப்பை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அதில் ஊற்றி அதை நன்கு கலக்கி விடவும். (தேனை விரும்புவர்கள் இதில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்து கொள்ளலாம்.)

    சர்க்கரை மற்றும் தேனை விரும்பாதவர்கள் அதற்கு பதிலாக அவரவர் விருப்பத்திற்கேற்ப உப்பை சேர்த்து கொள்ளலாம்.

    பின்பு ஒரு கிளாஸ் டம்ளரை எடுத்து அதில் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஐஸ்க்யூப்ஸ் மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் வெள்ளரிக்காய் புதினா லெமனேட்டை ஊற்றி அதில் 2 எலுமிச்சம் பழ slice ஐ நறுக்கி போட்டு 2 அல்லது 3 புதினா இலையை போட்டு சில்லென்று பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் அருமையான மற்றும் உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சியான வெள்ளரிக்காய் புதினா லெமனேட் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து இந்த கோடை வெயிலுக்கு பருகி மகிழுங்கள்.

  • பீட்ரூட் ரசம் செய்வது எப்படி?

    சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி இருந்தால் மிளகை அரைத்து ரசம் சாப்பிடுங்க.. என்ற வார்த்தையை பலர் சொல்வதை கேட்டிருப்போம். உடலை பல வழிகளில் ஆற்றும் சக்தியும், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் சக்தியும் ரசத்திற்கு உண்டு.

    ஆனால் நம்மில் பலருக்கு ரசமா? இந்த நேரத்தில், இந்த சோதனை தேவையா? அலறி அடித்து ஓடுவோம். புளி, தக்காளி, சீரகம், மிளகு சேர்த்து செய்யும் வழக்கமான ரசத்தை வெறுப்பவர்கள் சத்தான காய்கறிகளுடன் ரசம் செய்யலாம்.

    என்ன காய்கறிகள் ரசமா? என கேட்கிறீர்களா? ஆம், பீட்ரூட் ரசத்தில் புரதம், நீர்ச்சத்து, ஒமேகா 3 அமிலங்கள், நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை உடலுக்கு சக்தியைத் தரும். அதை எப்படி செய்வது என்பது இங்கே காணலாம்? அதற்கான சில எளிய குறிப்புகள் இதோ…

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் – 2

    தக்காளி – 2

    சீரகம் – 1 டீஸ்பூன்

    மிளகு- அரை டீஸ்பூன்

    உப்பு – சுவைக்கு ஏற்ப

    தேங்காய் எண்ணெய் – சிறிதளவு

    கடுகு, கறிவேப்பிலை – தாளிப்பிற்கு ஏற்ப

    செய்முறை

    உடலுக்கு வலுச்சேர்க்கும் பீட்ரூட் ரசம் செய்வதற்க முதலில் பீட்ரூட்டை தோலுரித்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    பின்னர் சீரகம், மிளகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் லேசாக அரைக்க வேண்டும்.

    கொஞ்சம் அரைத்தவுடன் தக்காளி மற்றும் நறுக்கிய பீட்ரூட்டை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பீட்ருட் ரசம் செய்வதற்கான கலவை ரெடி.

    இதையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை,, பெருங்காய தூள் போட்டு தாளித்த பின்னதாக அரைத்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும்.

    லேசாக வதங்கியதும் போதுமான அளவு உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும்.

    வழக்கம் போல ரசத்தைக் கொதிக்க விடாமல், நுரை கட்டி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு நறுக்கிய மல்லி இலைகளைத் தூவி விட்டால் போதும். சுவையான பீட்ருட் ரசம் ரெடி.

  • மீன் கோலா செய்வது எப்படி?

    :ஆங்கிலத்தில் மீட்பால்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கோலா உருண்டைகள் இந்திய துணைக்கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாகும்.

    கோலா உருண்டைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் சிக்கன் கோலா உருண்டை, மட்டன் கோலா உருண்டை, மீன் கோலா உருண்டை, வெஜிடபிள் கோலா உருண்டை ஆகியவை மிகவும் பிரபலமானவை. இன்று நாம் இங்கு காண் இருப்பது மீன் கோலா உருண்டை.

    மீன் கோலா உருண்டைகள் ஒரு மாலை நேர சிற்றுண்டியாகும், இது முற்றிலும் மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.

    அதுமட்டுமின்றி அவை உடலுக்கு சத்தானவை. தினமும் மாலையில் பிஸ்கட், சிப்ஸ் கொடுப்பதற்கு பதிலாக இந்த சத்தான உருண்டைகளை குழந்தைகள், பெரியவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    250 கிராம் வஞ்சிரம் மீன்

    4 பிரட்

    2 மேஜைக்கரண்டி சோள மாவு

    பெரிய வெங்காயம்  1

    உருளைக்கிழங்கு  1

    பூண்டு  1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கியது

    இஞ்சி  1 மேஜைக்கரண்டி பொடியாக நறுக்கியது

    ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்

    1 சிட்டிகை மிளகு தூள்

    மிளகாய் தூள்  தேவையான அளவு

    எண்ணெய்  தேவையான அளவு

    தேவையான அளவு உப்பு

    சிறிதளவு கொத்தமல்லி

    மீன் கோலா செய்முறை

    முதலில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி, மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து பிரட்டை எடுத்து மைக்ரோவேவ் அவனில் சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வைத்து எடுத்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு நற நறப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    மைக்ரோவேவ் அவன் இல்லையென்றால் பிரட்டை pan னின் மூலமாகவோ அல்லது toaster யின் மூலமாகவோ toast செய்து அரைத்து கொள்ளலாம்.

    பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.

    25 நிமிடத்துக்கு பிறகு அதை எடுத்து சிறிது நேரம் ஒரு பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும்.

    இப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    அடுத்து அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் மீனை போட்டு அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.

    5 நிமிடத்திற்கு பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக நம் கைகளின் மூலம் பிரித்து போட்டு அதில் இருக்கும் முள்ளை எடுத்து விடவும். (அனைத்து முள்களையும் மிகவும் கவனமாக எடுத்து விடவும்.)

    அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடான பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.

    வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடி பொடியாக நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி மற்றும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

    இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் பிரித்து வைத்திருக்கும் மீனை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பின்னர் அதில் மிளகு தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விடவும்.

    பிறகு அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை வேக விடவும்.

    அது வெந்ததும் அதில் சிறிதளவு கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் அதை ஆற விடவும்.

    இப்பொழுது ஒரு bowl லை எடுத்து அதில் சோள மாவை போட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

    நாம் வதக்கி வைத்திருக்கும் மீன் கலவை ஆறியதும் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நாம் கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை bread crumbs ல் போட்டு நன்கு உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

    இவ்வாறு மீதமுள்ள மீன் கலவையை உருட்டி தயாராக தட்டில் வைத்து கொள்ளவும்.

    அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

    எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் நாம் பிடித்து வைத்திருக்கும் உருண்டைகளை பக்குவமாக போட்டு பொரிக்கவும்.

    பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு இரு புறமும் அது பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் மொறு மொறுப்பாக இருக்கும் மீன் கோலா உருண்டை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.

  • கதம்ப சட்னி செய்வது எப்படி?

    எத்தனை சட்னிகள் தெரிந்தாலும், காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்யலாம் என்று தினமும் யோசிப்போம். நீங்களும் அதையே நினைக்கிறீர்களா?

    எனவே வழக்கமான தேங்காய் சட்னி மற்றும் தக்காளி சட்னி செய்வதற்கு பதிலாக கதம்ப சட்னியை ஒரு முறை செய்து பாருங்கள். இந்த கதம்பா சட்னி செய்வது எளிதானது மற்றும் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

    மேலும் இது இட்லி, தோசை மட்டுமின்றி சாதம் மற்றும் சப்பாத்தியுடன் கூட நன்றாக இருக்கும். கதம்ப சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

    கதம்பா சட்னி செய்முறைக்கான எளிய செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

    கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்

    வறுத்த வேர்க்கடலை – 3 டேபிள் ஸ்பூன்

    சின்ன வெங்காயம் – 15

    வரமிளகாய் – 5

    பச்சை மிளகாய் – 1

    பெரிய வெங்காயம் – 1

    பூண்டு – 6 பல்

    இஞ்சி – 1 இன்ச்

    புதினா – 1 கைப்பிடி

    கொத்தமல்லி – 1 கைப்பிடி

    கறிவேப்பிலை – 2 கொத்து

    தக்காளி – 2

    புளி – சிறிய துண்டு

    உப்பு – 3/4 டீஸ்பூன்

    பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

    தாளிப்பதற்கு…

    நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்

    கடுகு – 1/2 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

    பூண்டு – 3 பல்

    வரமிளகாய் – 1

    கறிவேப்பிலை – 1 கொத்து

    செய்முறை

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    பின் அதில் சின்ன வெங்காயம், வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

    அடுத்து நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.

    பிறகு அதில் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.

    பின்பு நறுக்கிய தக்காளி, புளி, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து லேசாக கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கதம்ப சட்னி தயார்.

  • சிறுதானிய தோசை செய்வது எப்படி?

    இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் தங்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயந்திர உலகில் பயணிக்கின்றனர். நம் வாழ்வில் நோய் நொடி இல்லாமல், நம் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படாமல், நமக்குப் பிடித்த பொருட்களை வாங்கி, மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக உழைக்கிறோம்.

    ஆம், குறிப்பாக ஆரோக்கியமான உணவை பின்பற்றுவதில்லை. புரோட்டோ, பீட்சா, பர்கர் போன்ற பிரபலமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை கடைகளில் அதிகம் சாப்பிடுகிறோம். இதனால், அதிக விலை கொடுத்து, சுகாதார சீர்கேடுகளை சந்திக்கிறோம்.

    ஒருபுறம், சிலர் இந்த விளைவைத் தவிர்க்க சிறு தானியங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். சிறுதானியக் கடைகளும் ஆங்காங்கே பெருகி வருகின்றன. இந்தச் சூழலில் நீங்கள் இன்னும் ஆரோக்கியமாக இருக்க விரும்பினால், சிறு தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சில உணவுப் பொருட்களை உங்கள் வாடிக்கையில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

    இன்று சிறு தானியங்களில் தோசை செய்வது எப்படி? என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

    சிறுதானிய தோசை:

    கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, வரகு, குதிரைவாலி போன்ற எண்ணற்ற சிறுதானியங்கள் உள்ளது. இவற்றில் ஏதையாவது ஒன்றை வைத்து நீங்கள் உங்களது வீட்டிலேயே சிறு தானிய தோசை செய்ய முடியும்.

    தேவையானப் பொருட்கள்

    சிறுதானியங்களில் ஏதாவது ஒன்று – 1 கப்

    அரிசி – 2 கப்

    உளுந்து – அரைகப்

    சீரகம்- 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை – சிறிதளவு

    எண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவு

    செய்முறை

    சிறுதானிய தோசை செய்வதற்கு முதலில் 2 கப் அரிசி, வரகு அல்லது, கேப்பை போன்ற சிறுதானியம் 1 கப், உளுந்து அரை கப் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ஊறவைத்துக் கொள்ளவும்.

    இதையடுத்து கிரைண்டர் அல்லது மிக்ஸியில் நன்கு மாவு பதத்திற்க அரைத்துக் கொள்ளவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் புளிக்க வைத்தால் போது சிறுதானிய தோசை மாவு ரெடி.

    மாவு புளித்து வந்ததும், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வழக்கம் போல் தோசை மாவு போன்று ஊற்றி எண்ணெய் ஊற்றி எடுத்தால் போதும். சுவையான சிறுதானிய தோசை ரெடி. ஒருவேளை நீங்கள் மாவு அரைக்கவில்லையென்றால், சிறுதானிய மாவை கலந்தும் சுடலாம்.

    குறிப்பு – ஒரு சிறுதானியத்தை மட்டும் வைத்துத் தான் தோசை செய்ய வேண்டும் என்பதில்லை. நவதானியங்களை அனைத்தும் மாவாக அரைத்து வழக்கமான தோசை மாவுடனும் கலந்தும் சுடலாம்.