செட்டிநாடு அதன் சமையலுக்கு மட்டுமின்றி இனிப்பு வகைகளுக்கும் பிரபலமானது. ரங்கூன் ஸ்வீட் என்பது செட்டிநாடு பகுதியில் உள்ள ஒரு சிறிய சிறப்பு இனிப்பு வகைகளில் ஒன்று.

வெல்லம் சேர்த்து செய்யக்கூடிய கேசரி வகை இது. இந்த இனிப்பு திருமண நிகழ்வுகளில் வழங்கப்படுகிறது. கேசரி என்று நினைப்போம். ஆனால் அது ரங்கூன் ஸ்வீட். ரங்கூன் ஸ்வீட் மிகவும் எளிதான செய்யக்கூடிய இனிப்பு.வாங்க செய்து ருசிக்கலாம்.

தேவையான பொருட்கள்

ரவை

முந்திரி

திராட்சை

நெய்

தேங்காய்

வெல்லம்

ஏலக்காய் தூள்

செய்முறை

இந்த இனிப்பு தயாரிப்பில் முதல் படி முந்திரி, திராட்சையை நெய்-ல் வறுப்பது. பேனில் ஒன்றரை ஸ்பூன் நெய் ஊற்றி 20 முந்திரி போட்டு பொன்னிறம் ஆகும் வரை வறுக்கவும்.

அடுத்ததாக உலர் திராட்சை 25 கிராம் போட்டு வறுத்தால் அது நன்கு உப்பி வரும்.

இவை இரண்டையும் தனியாக வைக்கவும். அதே பேனில் இரண்டு டீஸ்பூன் நெய் ஊற்றி அரை மூடி தேங்காயை துருவி நெய்-ல் போட்டு வறுங்கள்.

2-3 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுத்த பிறகு அடுப்பை ஆஃப் செய்யுங்கள்.

அடுத்ததாக ஒரு கப் வெல்லத்தை கடாயில் போட்டு அதற்கு 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.

இந்த வெல்ல தண்ணீர் ரங்கூன் புட்டு செய்வதற்கு முக்கியமானது. ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை ஆப் செய்யவும்.

கடாயில் ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றி அது உருகிய பிறகு 250 கிராம் ரவை போட்டு வறுக்கவும். ரவை நன்கு வறுப்பட்டால் நல்ல வாசனையை நுகர முடியும்.

இப்போது வெல்ல தண்ணீரை வடிகட்டி ரவை மீது ஊற்றவும். ரவையை வெல்ல தண்ணீரிலேயே வேக வைக்கவும்.

இனிப்பு அதிகமாக வேண்டுமானால் வெல்லம் ஒன்றரை கப் சேர்க்கலாம்.

ரவை கொஞ்சம் கொஞ்சமாக கெட்டி ஆக மாற ஆரம்பிக்கும்.

அடுத்ததாக கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள், வறுத்து வைத்திருக்கும் முந்திரி & திராட்சை மற்றும் தேங்காய் சேர்த்து கலந்து விடுங்கள்.
இவற்றை சேர்த்த பிறகு ஐந்து ஸ்பூன் நெய் ஊற்றுங்கள்.

கடாயை குறைந்த தீயில் வைத்து மூடி ஐந்து நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

ரவை நன்றாக வெந்து தண்ணீர் வற்றி இருக்கும். இறுதியாக மீண்டும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றுங்கள். ரவை இதை உடனடியாக உறிஞ்சி விடும்.