Tag: How To Make Sugar Pongal

  • வெண் பொங்கல் செய்வது எப்படி?

    பொங்கலில் பல வகைகள் உண்டு. சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப் பொங்கல், மிளகுப் பொங்கல், புளிப் பொங்கல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இன்று நாம் இங்கு காண்பது வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவாகும்.

    மக்கள் தங்கள் வீடுகளில் விசேஷ நாட்களில் காலையில் டிபன் சாப்பிடுகிறார்கள். வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களின் வீடுகளில் குறிப்பாக பொங்கல் பண்டிகையின் போது இருக்க வேண்டும்.

    இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் பரிமாறப்படுகின்றன. வெண்பொங்கலோடு மெது வடை கலவை தென்னிந்தியா முழுவதும் பிரபலமானது. இந்த காம்பினேஷன்க்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனி கூட்டமே உள்ளனர்.

    தேவையான பொருட்கள்

    1 கப் பச்சரிசி

    1/2 கப் பாசி பருப்பு

    1/4 கப் பால்

    1/4 கப் நெய்

    2 பச்சை மிளகாய்

    1 இஞ்சி துண்டு

    1 மேஜைக்கரண்டி மிளகு

    1 மேஜைக்கரண்டி சீரகம்

    10 to 12 முந்திரி

    1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்

    கருவேப்பிலை சிறிதளவு

    உப்பு தேவையான அளவு

    எண்ணெய் தேவையான அளவு

    செய்முறை

    முதலில் பச்சரிசியை நன்கு கழுவி சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும். இஞ்சியை தட்டி, பச்சை மிளகாய், மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசி பருப்பை போட்டு அதனின் பச்சை வாசனை போய் நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.

    பின்பு அதை நன்கு கழுவி தண்ணீரில் சுமார் கால் மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

    கால் மணி நேரத்திற்குப் பின் ஒரு குக்கரை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஊற வைத்திருக்கும் பச்சரிசி, மற்றும் பாசி பருப்பை மீண்டும் ஒரு முறை நன்கு கழுவி சேர்த்து கொள்ளவும்.

    அடுத்து அதில் கால் கப் அளவு பால் சேர்த்து மூடி போட்டு சுமார் 3 விசில் வரும் வரை வேக விடவும். அப்போது தான் பொங்கல் நன்கு குழைந்து வரும். (பொங்கல் குழைந்த பதத்தில் இருப்பதை விரும்பாதவர்கள் 2 விசில் வந்ததுமே இறக்கி விடவும்.)

    3 விசில் வந்ததும் குக்கரைத் திறந்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். (அடியில் தண்ணீர் இருந்தால் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை பொங்கலை கிண்டி விடவும்.)

    இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சுட வைக்கவும்.

    எண்ணெய் சூடானதும் அதில் ஒரு மேஜைக்கரண்டி மிளகு, ஒரு மேஜைக்கரண்டி சீரகம், பச்சை மிளகாய், தட்டி வைத்திருக்கும் இஞ்சி, முந்திரி, மற்றும் பெருங்காய தூள் சேர்த்து வதக்கவும்.

    சிறிது நேரம் வதக்கியதும் அதை இறக்கும் முன்பு சிறிதளவு கருவேப்பிலையை அதில் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும்.
    இப்பொழுது இதை குக்கரில் இருக்கும் பொங்கலில் ஊற்றி நன்கு கலந்து விடவும்.

    பின்பு மீதமுள்ள நெய்யை ஊற்றி மீண்டும் ஒரு முறை நன்கு கலந்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

    இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான வெண்பொங்கல் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

  • இனிப்பான கரும்பு சாறு பொங்கல் செய்வது எப்படி!!

    பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. இதனால், சந்தை எங்கும் கரும்பு விற்பனையாகிறது. நீங்கள் கரும்பு பிரியராக இருந்தால் கரும்பில் விதவிதமான ரெசிபிகளை தயாரித்து சாப்பிட விரும்பினால், பொங்கல் ஸ்பெஷலாக கரும்புச்சாறு பொங்கலைச் செய்யுங்கள்.

    இந்த கரும்பு பொங்கல் செய்வது மிகவும் எளிது. கரும்பு பொங்கல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கரும்பு சாறு பொங்கல் செய்முறையின் எளிய செய்முறை கீழே உள்ளது.

    படித்து சுவைத்து உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    அரிசி – 1 கப்

    கரும்புச்சாறு – 1 1/2 கப்

    வெல்லம் – 1/8 கப்

    பாசிப்பருப்பு – 1/4 கப்

    நெய் – 2 டேபிள் ஸ்பூன்

    முந்திரி – சிறிது

    உலர் திராட்சை – சிறிது

    ஏலக்காய் பொடி – சிறிது

    செய்முறை:

    முதலில் கரும்பை தோல் நீக்கி மிகச்சிறு துண்டுகளாக வெட்டிவைத்துக்கொள்ளவும்.

    பிறகு மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். இப்படி 1 1/2 கப் கரும்பு சாறு எடுத்துக் கொள்ளவும்.

    பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, பாசிப்பருப்பை சிறிது வறுத்து தனியாக வைக்கவும்.

    அதன் பிறகு அரிசியை தண்ணீரில் நன்கு கழுவவும்.

    பின் குக்கரில் கழுவிய அரிசி, பாசிப்பருப்பு மற்றும் கரும்புச்சாறு எடுத்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி 4 விசில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

    விசில் வந்ததும் குக்கரைத் திறந்து வெல்லம் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து வெல்லம் கரையும் வரை கரண்டியால் நன்கு கிளறவும்.

    அதன் பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி வைக்கவும்.

    மீண்டும் அடுப்பில் சிறிய கடாயில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து குக்கரில் வைத்துள்ள பொங்கலுடன் கிளறி இறக்கினால் சுவையான கரும்புச்சாறு பொங்கல் தயார்.