மஞ்சூரியன் ஒரு இந்திய-சீன உணவாகும், இது இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இவை இளம் தலைமுறையினர் மற்றும் உணவு பிரியர்களின் விருப்பமான உணவாகும்.
மஞ்சூரியனில் பல வகைகள் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கவை சிக்கன் மஞ்சூரியன், கோபி மஞ்சூரியன், பன்னீர் மஞ்சூரியன், மற்றும் மீன் மஞ்சூரியன். ஆனால் இன்று இங்கு காண்பது வித்தியாசமான உருளைக்கிழங்கு மஞ்சூரியன்.
உருளைக்கிழங்கு மஞ்சூரியன் வழக்கமான மஞ்சூரியன் போலவே செய்யப்படுகிறது. எனவே மற்ற மஞ்சூரியன்களைப் போலவே, உருளைக்கிழங்கு மஞ்சூரியையும் ஃபிரைடு ரைஸ் மற்றும் நூடுல்ஸுக்கு சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.
உருளைக்கிழங்கு மஞ்சூரியன் மாலை நேர சிற்றுண்டியாகவும் சிறந்தது. எனவே இதை நம் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
¼ கப் சோள மாவு
¼ கப் மைதா மாவு
4 உருளைக்கிழங்கு
1 பெரிய வெங்காயம்
½ கப் குடை மிளகாய்
2 பூண்டு பல்
1 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
1 மேஜைக்கரண்டி கிரீன் சில்லி சாஸ்
1 மேஜைக்கரண்டி கெட்சப்
2 மேஜைக்கரண்டி வினிகர்
¼ மேஜைக்கரண்டி மிளகு தூள்
தேவையான அளவு மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன்
செய்முறை:
முதலில் வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி, உருளைக்கிழங்கை அவரவருக்கு பிடித்தமான வடிவில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு bowl ல் சோள மாவு, மைதா மாவு, மிளகு தூள், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதை நன்கு தண்ணியாக கரைத்து கொள்ளவும். (இந்த கலவையை நன்கு தண்ணியாக இருப்பது அவசியம் லேசாக உருளைக்கிழங்கின் மீது இவை ஒட்டினால் போதும்.)
பிறகு நாம் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை எடுத்து இதில் போட்டு அதை நன்கு கிளறி விடவும்.
இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சூடான பின் அதில் கடாயின் அளவிற்கேற்ப மாவில் இருக்கும் உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாக எடுத்து பக்குவமாக போட்டு அது நன்கு பொன்னிறம் ஆனதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சூடான பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் குடை மிளகாயை போட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
2 நிமிடத்திற்குப் பிறகு அதில் சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், வினிகர், மற்றும் கெட்சப்பை ஊற்றி அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
1 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதையும் சேர்த்து அதை நன்கு கலந்து விடவும். (கிரேவி சிறிது கெட்டியாக வேண்டும் என்றால் சோள மாவில் தண்ணீர் கம்மியாக ஊற்றி கரைக்கவும்.)
பின்னர் உப்பை சரிபார்த்து உப்பு தேவைப்பட்டால் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ளவும்.
அடுத்து நாம் பொரித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கை இதில் போட்டு அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் 2 லிருந்து 4 நிமிடம் வரை வேக விடவும்.
4 நிமிடத்திற்கு பிறகு அதில் சிறிதளவு ஸ்பிரிங் ஆனியன் தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து சுவைத்து மகிழுங்கள்.
